Posts

Showing posts from May, 2020
Image
சாகும் தருவாயில் இருக்கும் என்னிடம் வாக்குமூலம் கேட்கிறார்கள் நானோ நெருப்பு தின்ற உடம்பில் கருகிக்கொண்டிருந்த உயிரில் செத்துவிடும் கணத்திலிருந்தேன் நா வறண்டு கடும் தாகத்திலிருந்தேன் தண்ணி தண்ணி என்று கேட்டு மன்றாடினேன் அதிகாரமோ கேள்விகளால் என் உயிரைத் துளைத்து சாவின் முன் நிறுத்தியது என் பாதி எரிந்த கண்கள் வழியே கருணை மரித்த உலகினைக் காண்கிறேன் என் ஞாபகத்தில் நான் வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்களை கடைசியாய் ஒரு முறை புரட்டிப் பார்க்கிறேன் எத்தனை எளிமையாய் என் சின்னஞ்சிறு உலகை ஒரு சிட்டைப்போல பறந்து வாழ்ந்திருந்தேன் எந்த வலியும் உணர்ந்திராத பருவத்தில் வாழ்ந்திருந்த என்னைப் போய் கொடூரமான குற்றவாளியைப் போல் கைகால்களைக் கட்டி பெட்ரோல் ஊத்திக் கொளுத்திவிட்டார்கள் எரிந்து முடிந்த என்னிடமே கேட்டார்கள் பாவிகள் நீயே கொளுத்திக்கொண்டாயா என்று இதற்கு மேல் நீதியை அநீதியாக்கும் உலகில் வாழ்ந்தென்ன பயன் என்று செத்துப்போகிறேன் உயிர்கள் வாழ அருகதையற்ற சமூகமே...
Image
இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ என் கால்கள் இப்போதே துவண்டுவிட்டன அம்மாவின் உடல் தாங்கதென இடுப்பிலிருந்து இறங்கிக்கொண்டேன் எப்போது வீடு வரும் அம்மா இதோ வந்துவிடும் செல்ல மகனே அம்மா நீ தரும் நம்பிக்கையில் எத்தனை மைல்களும் நடப்பேன் ஏன்னம்மா நாம் நடந்தே போகிறோம் முன்பெல்லாம் பேருந்தில் அல்லவா அழைத்துச் செல்வாய் இப்போது ஏனம்மா இப்படி எல்லாம் நம் நாடு நமக்குத் தந்த வெகுமதி மகனே நம்மிடம் பொய்கூறியவர்களின் சதி வாக்குறுதி அளித்தவர்களின் அராஜகம் அயோக்கியத்தனம் மகனே இவர்களின் நாற்காலி கனவுகளுக்கு விலை போய்விட்டோம் அவர்கள் அங்கே அமர்ந்திருக்கும்வரை நாம் நட்டாற்றிலும் நடுவீதிகளிலும்தான் வாழ்ந்துகொண்டிருப்போம் நட மகனே நட மகனே நாம் நாசமாய்ப் போகவே இந்த தேசத்தில் பிறந்திருக்கிறோம் நாம் வாழ்ந்தாலும் செத்தாலும் அவர்களுக்கு ஒரு நட்டமுமில்லை எப்படியோ ஜெயித்துவிட்டார்கள் இனி நாம் அவர்களின் அடிமைகள்தான் நட மகனே நட நம் வீடு வந்துவிடும் நம் தேசம் வந்துவிடாது. PC : Dayalan Shunmuga
Image
எங்கள் கதறல் உங்களுக்கு கேட்டிருக்காது நாங்கள் அழுவதற்கும் வறுமையில் உழல்வதற்குமே சபிக்கப்பட்டிருக்கிறோம் உழைக்கும் வழியையையும் ஒழித்துக்கட்டிய நீங்கள் இப்போது எங்கள் நிலத்திற்கான பயணத்தையும் அபகரித்துக்கொண்டீர்கள் எதுவுமில்லாத எங்களிடம் மீந்திருக்கும் உயிர் வாழும் நம்பிக்கையையும் தகர்த்துவிட்டு நல்லது செய்வதுபோல் நாடகம் ஆடுகிறீர்கள் இனாம் தருவதாகக் கூறி மோசடி செய்கிறீர்கள் வாக்களித்த எங்களை நடுத்தெருவில் நிறுத்தி பட்டினியில் ஆழ்த்திவிட்டீர்கள் தூரத்திலிருக்கும் வீடுகளுக்கு போய்ச் சேருவோமா உயிருடன் என்று தெரியவில்லை கைகளில் சல்லிக்காசில்லை பசியில் குழந்தைகள் துடிக்கிறார்கள் இதயம் வெடித்துச் சிதறுமோசை உங்களுக்கு கேட்கவில்லை இரக்கமற்ற பாவிகளே உச்சாணியில் ஏற்றி வைத்த எங்களை பிச்சையெடுக்க வைத்துவிட்டீர்கள் சட்டத்தையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு கனவு காண்கிறீர்கள் எல்லாம் ஒரு நாள் சிதையும் முற்றிலும் அழிந்து போவீர்கள் எங்கள் கண்ணீர் சுட்டெரிக்கும் காலம் வந்துவிடும் அதுவரை எங்களை உங்கள் கால்களுக்கு கீழ் போட்டு மிதித்து கொடுங்கோல் ஆட்சியை நடத்துங்கள் அதிகார வர்க்க...
வண்ணத்துப்பூச்சிகளுக்கு வண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்று அறியமுடியவில்லை  கண்களுக்கு ரசிக்கும் எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிவதில்லை மலர்களில் தேனிருப்பதை எப்படி அறிகிறது என்பதும் புரியவில்லை மலர்கள் அவற்றின் வருகையும் உணர்வதில்லை யோசிக்கும் ஆற்றலில் யாவும் அறியும் நான் யோசிக்காதவற்றின் அழகில் மயக்கமுற்றுப்போவதும் தெரியவில்லை யோசிக்காத யாவற்றின் புதிரை யோசிக்கும் நான்  அவிழ்க்க வழியில்லை வண்ணங்களை வண்ணத்துப்பூச்சிகளில் விட்டுவிடுவோம்.
Image
*  ஆழ்ந்த இருள்     நிலவு நடக்க வைக்கிறது     என் நிழலையும். *  மரக்கிளைகள் மறைக்க                   முயல்கின்றன   நிலவொளியோ    பீறிடுகிறது. *  பனிக்காலம்    மெல்ல வெளி வருகிறது    காலைப் பொழுது. * செதுக்கிய பின் புத்தன்    அதற்கு முன் கல்    ஒரே அமைதி.     பனிக்காலம் ஆரம்பம் மெல்ல வெளி வருகிறது காலைப் பொழுது. பனிக்காலம் ஆரம்பம் மெல்ல வெளி வருகிறது காலைப் பொழுது. பனிக்காலம் ஆரம்பம் மெல்ல வெளி வருகிறது காலைப் பொழுது.   பனிக்காலம் ஆரம்பம் மெல்ல வெளி வருகிறது காலைப் பொழுது.
ஹைகூ கவிதைகள் * அந்தி சாயும் பொழுதை    கூடடையும் பறவை     பாடி மறைகிறது. * மொட்டைமாடியில்தான்     காற்றும் கிடைக்கிறது     கூடவே நிலவும். *    நாய்க்குரைப்பில்தான்      பூமிக்குத் திரும்பினேன்      நிலவில் மூழ்கியிருந்த நான். *   பூக்கள் மலர்ந்திருக்கும்      தோட்டத்தை அறிந்திருக்கும்      கோடைகால       வண்ணத்துப்பூச்சிகள்.                                                                                                                                         ...
Image
நீண்ட நாட்கள் இந்த பூமியில் இந்த மலர்கள் இருப்பதில்லை நீர் கிடைத்து வாழும் வேளைகளில் மொட்டாய் மெது மெதுவாய் தான் அழகென்பது உணராமல் மலரும் கணம் அறியாமல் மறையும் கணம் அறியாமல் மலர்ந்து குறுகிய காலமே வாழ்ந்து செல்லும் இந்த வெள்ளந்தி மலர்போல் என்னால் இருக்க முடிவதே இல்லை.
எத்தனை துரோகங்கள் நிகழ்ந்த பின்னும்  இசையின் வழியே நம்பிக்கை மலர்கிறது அது அற்புதத்தின் ஆரம்பம் எல்லையைச் சேர்ந்துவிட்ட உற்சாகம் காத்திரு பொழுதுகள் விடியலிலிருந்தே தொடங்குகிறது உன் கண்ணீர்த்துளிகள் உன் சாதனையை எட்டிப்பிடிக்கும் சத்தியங்கள் தோற்பதில்லை இரவென்பது இருட்டெனினும் பின்னே வரும் விடிய அதை ஒளியாக்கிவிடும் நாம் உயரச் செல்கையில் சற்று கீழே விழுந்தாலும்  உயரத்தை நோக்கிய படிக்கட்டுகளில் சென்றுகொண்டிருப்போம் நட்சத்திரங்கள் நம் வசமாகிவிடும்.
Image
தற்கொலைக்கான நியாயத்தை இறந்தவரிடம்  எப்படிக் கேட்டு விடமுடியும் நசுக்கும் பெரும் பாறைகளுக்கிடையே விடும்  பெருமூச்சினை உணர்வதற்கில்லை யாரும் மலர்களும் நிலவும் பறவைகளும் கூடிய  அழகிய பொழுதுகள் நம்மைச் சுற்றி இருந்தபோதும் நாம் கண்களில் நரகத்தைக் காணவே விதிக்கப்பட்டிருக்கிறோம் விடியல் இரவு உரையாடல் வழமையாய்  நம்மைக் கடக்க ஒரு கணமொன்றில் மரணம் நம்மை வரவேற்கும் விடைபெறுதலின்றி வேறொன்றுமில்லை. சபிதா நீங்கள் விட்டுச் சென்ற புகைப்படத்தில்  உங்களைச் சந்தித்த பொழுதினைக் காண்கிறேன் இளைப்பாறுங்கள்.
Image
ஒரு குவளை நீர் நீ... மழை மேகங்களுடன் வந்திருந்தாய் ஊழிக்காற்றில் மரம் போல விழுந்த பொழுதில் தாங்கின உன் மெல்லிய கரங்கள் அநாதையிடம் தாய்மைபோல நெருங்கியிருந்தாய் பாலைவனத்தில் ஒரு குவளை நீரானாய் இணையிழந்த பறவையிடம் காதலியாகியிருந்தாய் இரவுகளின் வேட்கையை காதலால் பற்றிக்கொண்டாய் உன் கனிந்த இதயத்தால் தீராத் துயர்களைத் துடைத்தாய் அம்பு பாய்ந்த பட்சிக்கு கருணை மருந்திட்டாய் வலுப்பெற்ற சிறகுகளால் ஆகாயத்தைக்கூட கடந்தேன் ஸபரிசத்திலும் பாய்ச்சலில் புரளும் இரவுகளிலும் பிறந்துவிட்ட சிசுவைப்போல புத்துணர்ச்சி அடைந்தேன் இனி இல்லையென்றானது என் இலையுதிர்காலம்.
Image
இறந்த இரவொன்றில் இறந்திருந்தேன்  என்னை யாரெனக் குழம்பியிருந்தேன் அது நானில்லை என் போதையெனச் சொன்னார்கள் அது நல்வாக்கியமாய் இல்லை அது துரதிருஷ்டவசமானது எனக்கான நன்மைகள் அழிவது என் சவக்குழியின் முன் நானே  என்னை மூட மண்ணை அள்ளியிருந்தேன் அது நல்ல சகுனமில்லை என் வானத்தின் நட்சத்திரங்களை காலம் பறித்துவிட்டது இப்போது இரவுகள் ஒளிர்கின்றன ஆனால் அங்கு எதுவுமில்லை என் உயிர் மட்டும் இலையுதிர் பருவத்தின் சோகத்தை முணுமுணுக்கிறது அது எனக்கான துர்க்கனவின் தொடக்கம் என்கிறார்கள் விழுந்தவிட்ட பள்ளாதாக்கில் கதறும் என் குரல்  யாருக்கும் கேட்கவில்லை வருகிறேன்.
Image
நானிருந்தேன் என் அவமானங்களை எரித்துக்கொண்டு ஆனால் எதுவும் நீங்கவில்லை இதயம் ஆழ்கடல் அலைகளில் சிக்கி உழன்றது காலம் என்னை உலகைவிட்டு பறித்துப்போட்டுவிடத் துடிக்கிறது எதோ ஒரு சிறு நம்பிக்கை வாழ்ந்துவிட்டுப் போ என்கிறது துரத்தும் துரோகங்கள் என்னை பயமுறுத்துகிறது ஏன் இப்படி ஒரு மோசமான வாழ்விற்குள் இருக்கிறேன் எதுவும் புரியாமல் பகலிலும் இரவிலும் தள்ளாடித் திரிகிறேன் ஒளிரும் இருளுக்கு ஒன்றுமில்லை ஒரு பாவமும் செய்யவில்லை அமைதியில் உறைந்து மடிகிறது நான்தான் எக்கணமும் இறக்கை முறிந்து கிடக்கிறேன் என் வாக்கியங்கள் துருப்பிடித்து இளிக்கின்றன என் சொற்கள் எனக்கே எதிரியானவை உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.
Image
ஒற்றைத் தட்டான் கொடும் வெயிலின் மீது  பறந்தலைகிறது தனக்காய் சுவரில் விழும் அதன் நிழல்  என்னைப் போலவே தடுமாறுகிறது மிருதுவான இறக்கைகள் எரிந்துவிடுமோ  எனப் பதறியவேளை அது பறந்துகொண்டுதானிருந்தது முதுவேனிற்காலத்தில் கடுஞ்சூட்டில்  தன் பயணத்தில் மூழ்கிய அது என்னைச் சுற்றி வந்து என்னைப் பார்த்ததா  என்று தெரியவில்லை ஆனால் தன்னைக் கவனித்துக்கொண்டு பறந்தது அந்தரத்தில் மிதந்தலைதல் போல்  வேறென்ன என்றவாறு.
Image
குயில்கள் நல்ல வெயில் பொழுதில் கூவிக்கொண்டிருந்தன  தேர்ந்த இசைக்கலைஞன் போல் நானோ தனிமை தந்த சோகத்தில் ஆழப்புதைந்திருந்தேன் எதுக்காக எனத் தெரியாமல் கூவும் அதனியல்பு என்னிடமில்லை யோசித்து எதையும் செய்யும் வல்லமையின்றி சுருங்கிப்போகிறேன் என்னைச் சுற்றிலும் என்னை மீறமுடியாத சுவர் நினைத்த எல்லைக்குப் போக முடியாத விதிகள் குயிலின் வெளியோ எல்லையற்று நீண்டு கிடக்கிறது எத்திசையிலும் பறக்கலாம் எம் மரத்திலும் ஓய்வெடுக்கலாம் முக்கியமாய் அதற்கு அரசாங்கம் இல்லை எப்போது வேண்டுமானாலும் கூவும் தன்னை ரசித்துக்கொள்ளும் நானோ அறிவிற் சிறந்தவன் ஆகச் சிறந்த அடிமை.
யாரோ துரத்துகிறார்களோ போய்க்கொண்டே இருக்கிறேன் எப்போது பிடிபடுவேன் யாரும் சொல்லவில்லையே பிடிபட்டுவிடுவேன் சர்க்கஸ்கூடாரத்தின் விலங்கைப்போல என் ரகசியக் கதறலை  நான் மட்டும் அறிந்தவனாயிருக்கிறேன் என்னிடம் வரவில்லை யாரும் என் கூக்குரல் எவன் காதுகளுக்கும் எட்டவில்லை போலும் எதையும் செய்ய வெளியேறாதே வீட்டிற்குள் இரு யாரோ சொல்கிறார்கள் என் தொலைவுகள் முடங்கிவிட்டன வீட்டில் சுவர்களில் ஒன்றாய் மாறிக்கொண்டிருக்கிறேன். ஏப்ரல் 4 / 2020 / காலை 10 மணி
Image
நமக்கு வர வேண்டிய யாவும் பறிபோய்க்கொண்டிருக்கின்றன சாத்தானின் கருணையில் மட்டுமே நம் நிலத்தில் சாவுகள் நிகழாதிருக்கும் நம் வழிகளை நம்மைக் காப்பதாய்ச் சொல்பவர்களே பெரும் பாறைகளைக்கொண்டு மூடத் தொடங்கிவிட்டார்கள் நம் காதுகளுக்கு நம் சவப்பெட்டிகள் செய்யும் ஓசை கேட்கிறதில்லையா நம் வானின் நட்சத்திரங்கள் திருடு போய்க்கொண்டிருப்பதை  எதிர்த்துக் கேட்க எவருமில்லை நம்மிடம் மீதமிருந்த நம்பிக்கைகள் வெளிறிக்கொண்டு வருகின்றன நம் திசையை இருட்டைக்கொண்டு ஒளியேற்றுகிறார்கள் நம் கண்களில் இருள் மட்டுமே பாயத் தொடங்கிவிட்டது நாம் இசைக்கும் பாடல்களில் மரணம் குறித்த அச்சம் ததும்புகிறது நாம் விடைபெறும் காலத்தில் அதோ அவர்கள் மட்டும் உயிரோடு இருக்கப் போவதாய்  கற்பனையில் மிதக்கிறார்கள்
Image
உன் அருகாமையில் கங்காருவின் மடியில்  இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு விதை வெடித்துக் கிளம்பும்  ஒரு தாவரத்தின் மென்மை உன் விரல்களில் யாருமற்ற இரவில் உன்னுடன் மட்டுமே  உரையாடும் சொற்களில் ததும்பும் தாபம் உலகத்தில் நீயும் நானுமே இருப்பதான அபூர்வ பிரக்ஞையில் நம் காதல் குளிர்ந்த கடலென நம்மை நனைத்துப்போகிறது உன் கண்களில் ஒளிரும் நட்சத்திரங்களில்  நமக்கான இரவை ஒளியேற்றுகிறாய் உன் முழு உடலும் நான் சுவைக்கப் போகும்  அதிசயக்கனி போல ஜொலிக்கிறது உன்னைத் தோலுரித்து ருசிக்கும்வேளை  உன் விரக வேதனையின் ஒலி  என் காமத்தில் நுழைந்து வெறியேற்றும் அதோ அந்த நிலவும் வெட்கித் தலைகுனிகிறது உன் ஆடைகளை மெதுமெதுவாய்க் கலைகிறேன் நீயென்பதும் நானென்பதும் தொலைகிறது அன்பே.
Image
நடு இரவில் காகங்கள் கரைகின்றன ஏனோ இருட்டின் நடுவில் என்னுடல்  ஏதோ பயத்தில் நடுங்குகிறது உறக்கத்தில் நகரம் விடியலுக்கான பாதையில்  நகர்கிறது மெதுமெதுவாய் நான் வந்த காரணம் அறியாமல் எனக்குள் பிதற்றுகிறேன் நட்சத்திரங்களைக் கூர்ந்து கவனித்தேன் அது ஏன் மின்னுவதை நிறுத்தவில்லை என யோசித்தேன் வெகுதூரத்திலிருக்கும் அது ஏன் இருக்கிறது எங்கோ காவலாளியின் எச்சரிக்கை ஒலி அவன் ஏன் அடர்ந்த இருளின் மீது யாருமில்லாது திரிகிறான் திருடர்கள் இல்லாத வெளியில் எத்தனை நாட்கள் இவற்றுடன் நானிருப்பது யார் தீர்மானிக்கிறார்கள் இருளில் என் உயிர் துடிக்கிறது அது நீள்கிறது கனவு போன்ற வாழ்க்கையில் எல்லாம் நிஜம் என்கிறார்கள் ஆனால் எதுவும் அப்படியானதில்லை ஆமாம் அப்படியானதில்லை.
Image
பசிக்கு உணவளிப்பதை விட்டுவிட்டு  கண்ணுக்குத் தெரியாத நோய்த்தொற்றின்  எண்ணிக்கையைப் பற்றி நாள் தவறாமல்  அறிவித்துக்கொண்டு அதை விரட்டும் வழிகளை  ஆராய்ந்துகொண்டிருக்கிறீர்கள் உழைக்கும் வழியற்று நிர்க்கதியிலிருக்கிறோம் அடுப்புகள் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றுவிட்டன நெல்மணிகள் இருந்த பானைகளில் வெற்றிடம் நிரம்பி வழிகிறது உங்களுக்கென்ன கைநிறைய  காசும் மூடை மூடையாய் அரிசியையும்  பதுக்கி வைத்துள்ளீர்கள் நீங்கள் நடத்தும் நாடகத்தில்  எங்கள் பாத்திரங்கள் கண்ணீரில் நிரம்பித் ததும்புகின்றன பரவும் தொற்றில் மடிந்துபோகலாம் கவலையில்லை பசியில் மடியும் காலத்தைத் தந்த உங்களைத்தான் மன்னிக்கவே முடியாது எங்கள் வரிசையில் நாங்கள் நிற்கவில்லை இந்த தேசத்தின் வறுமை உலகத்தின் முன்  அவமானமாய் நிற்கிறது வல்லரசே.
Image
எங்கள் வங்கிக்கணக்குகளில் இருந்த இருப்பு கரைந்துவிட்டது  எங்கள் வருமானம் பூஜ்ஜியத்தில் எங்களிடம் மீதமாய் பசி மட்டுமே இனி எங்களுக்கு உழைக்கும் மார்க்கமில்லை நாங்கள் இறந்துபோக தயாராகிக்கொண்டிருக்கிறோம் சொற்ப நாணயங்களை இனமாய்க்கொடுத்துவிட்டு முடிந்தால் பிழைத்துக்கொள்ளென கைவிரித்துவிட்டது அதிகாரம் வீட்டுக்குள்ளிரு உயிரைப் பாதுகாத்துக்கொள் எனச் சொல்லிவிட்டு நோய்த்தொற்றின் எண்ணிக்கையில் கவனம் கொள்கிறது பாழாய்ப்போன அரசு நோய்த்தொற்று வந்துவிடும் அச்சத்தில் பசித்தொற்றிலும் வீழும் அபாயத்திலிருக்கிறோம் எங்கள் உயிரைக் காத்துக்கொள்ள யாருமில்லாத தேசத்தில்  உணவின்றி தூக்கமின்றி தவிக்கிறோம் இனி எது நடந்தாலுமென்ன ஊரடங்கில் உயிர் தப்பிக்கும் நாங்கள் பசிப்பிணியில் மாண்டுபோவோம் சாவு எண்ணிக்கைப் பட்டியலில் பசித்தொற்றால் இறந்தவர்களின் பெயர்களையும்  அறிவித்து மகிழுங்கள் மதி கெட்ட ஆட்சியாளர்களே.
Image
துயரநாட்களில் வேதனைமிக்க கதைகள் ஒலித்தவண்ணமிருக்கின்றன செய்வதறியாது எதையாவது செய்து அமைதியைத் தேடுகிறேன்  அது தூரத்தில் எங்கோ மறைந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது சுட்டெரிக்கும் பகல் உடலைத் துளைத்து மனதின் சமனைக் குலைக்கிறது எந்தப் பிடிமானமும் இல்லாது பறவைகள் பாடுவதை  வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதை நட்சத்திரங்கள் மினுங்குவதை  புலனுற்று லயிக்கும் நிலை துறக்கிறேன் எத்தனை நாட்கள் சுவர்களுக்குள் மறைந்து திரிவேன் மூளை நரம்புகள் ரத்தத்தில் சூடேறி தனிமைக்குள் வெடித்துச் சிதறுகின்றன எப்போதாவது வரும் மழையில் நனையும் இதயத்தில்  கொஞ்சம் ஆறுதல் மீள்கிறது ஈரம் காய்ந்து உலர்ந்துபோகையில் உயர்ந்த வெப்பத்தில் புத்தி பேதலித்து  பைத்தியத்தின் வாசலைத் திறக்கிறது எனக்குள் நான் எதை எதையோ பேசி  அநாதரவான தெருக்களில் திரியும் மனிதன் போலாகிறேன் இரவு நதிபோல் பொங்கி என் அறையை நிரப்பும்போது  மூழ்கிப்போகிறேன் ஏதும் புரியாது இனியும் இவ்வாறுதான் என நினைக்கும்வேளை  எதுவேண்டுமானாலும் ஆகிப்போகலாம் என்ற சமாதானத்தில்  உயிரைக் கையில் பிடித...
Image
நீ விலகிச் செல்வதெல்லாம் நான் நெருங்கி வரவேதான் இல்லையா உன் விலகல் தரும் அர்த்தத்தில் நம் காதலில் வசந்தம் தொடங்குகிறது ஆகாயம் மழை பொழிகிறது வானிற்கு கீழ் யாவும் துளிர்த்து தழைத்துப் பூத்து கனிகின்றன தனிமைக்குள் விரியும் பசும்வெளியில் உன் நாணல்கள் வெட்கத்தில் தலைகுனிகின்றன பனித்துளிகளில் பட்டுத் தெறிக்கும் ஒளியில் உன் புன்னகை கசிகிறது சலசலக்கும் நீரோடையில் உன் கொலுசுகள் சிணுங்குகின்றன துள்ளித் தாவும் கயல்களில் உன் சதைகள் ஒளிர்கின்றன அந்தியில் உன் நிறங்கள் பூமியை ஒளியூட்டுகின்றன நிலவில் உன் முகத்தின் மினுமினுப்பு விண்மீன்களில் உன் இமைகள் மெதுமெதுவாய் அசைந்துகொள்கின்றன தவழ்ந்து திரியும் காற்றில் உன் உடலின் நறுமணம் இயற்கையாகிய உன்னில் எதுவும் வெறுப்பதற்கில்லை நீ விலகியிருக்கிறாய் என்று சொல்ல எதுவுமில்லாத போது  அருகிருக்கிறாய் என்று சொல்லவே  என் கவிதை இருக்கிறது பெண்ணே...