உன் விலகல் தரும் அர்த்தத்தில் நம் காதலில் வசந்தம் தொடங்குகிறது
ஆகாயம் மழை பொழிகிறது
வானிற்கு கீழ் யாவும் துளிர்த்து
தழைத்துப் பூத்து கனிகின்றன
தனிமைக்குள் விரியும் பசும்வெளியில்
உன் நாணல்கள் வெட்கத்தில் தலைகுனிகின்றன
பனித்துளிகளில் பட்டுத் தெறிக்கும் ஒளியில் உன் புன்னகை கசிகிறது
சலசலக்கும் நீரோடையில் உன் கொலுசுகள் சிணுங்குகின்றன
துள்ளித் தாவும் கயல்களில் உன் சதைகள் ஒளிர்கின்றன
அந்தியில் உன் நிறங்கள் பூமியை ஒளியூட்டுகின்றன
நிலவில் உன் முகத்தின் மினுமினுப்பு
விண்மீன்களில் உன் இமைகள் மெதுமெதுவாய் அசைந்துகொள்கின்றன
தவழ்ந்து திரியும் காற்றில் உன் உடலின் நறுமணம்
இயற்கையாகிய உன்னில் எதுவும் வெறுப்பதற்கில்லை
நீ விலகியிருக்கிறாய் என்று சொல்ல எதுவுமில்லாத போது
அருகிருக்கிறாய் என்று சொல்லவே
என் கவிதை இருக்கிறது பெண்ணே...

Comments
Post a Comment