ஆகாய வீதியில் மஞ்சு பொதிகள்
அமைதியில் உறைந்திருக்கின்றன
தனிமையில் இருக்கும் உன்னைப்போலவே என் இருப்பின் இடையே இருள் அமர்ந்திருக்கிறது என்னைப்போலவே
நீயும் நானும் தனித்தனியே
நம்மை நினைத்தபடி
நினைவுகளால் இணைந்திருக்கிறோம்
இதுவே காதலின் உன்னதம்
காற்றில் அசையும் மரங்களில்
உன் குரலின் இசையை அறிகிறேன்
அது பேரானந்தத்தின் தொடக்கம்
என்னை உன்னிடம் அனுமதிக்காத காலத்தில் வார்த்தைகளின் வழியே
உன்னைத் தொட்டு உணரும் சக்தியை
கவிஞனாய்ப் பெற்றிருக்கிறேன்
உன் படுக்கையின் மீது நீ மட்டும் இல்லை
நானும் இருக்கிறேன் என்பது எத்தனை அழகானது
நித்திரையில் எல்லா இரவுகளும்
நான் மட்டுமே கனவாய் வந்து கொண்டிருப்பேன்
அதை நீ சொல்லாவிடினும்
அறிந்து கொள்வேன்
அதுவே நம் காதலின் மகத்துவம்
கனத்த இருட்டில் ஒளி தரும் கற்பனையில் வடிவான உன்னில்
இப்போது முத்தமிட தொடங்கிவிட்டேன்
மிகப்பெரிய வானம் என்னுடன் இருக்கிறது உன்னைப் போலவே அன்பே ....

Comments
Post a Comment