Posts

Showing posts from September, 2020
Image
நித்திரை வராத மழை இரவில் உன் ஞாபகம் சொட்டுச் சொட்டாய் என்னிலிருந்து வீழ்கிறது  கனத்த தனிமையில் அடர் இருளின் இடையே ஒளியற்ற வானம் போல இருக்கிறது இதயம்  எத்தனை மாதங்கள் பேரிடர் காலத்தில் நீயற்ற துயரத்தில் கடந்துவிட்டன பெரும் நோய்த்தொற்றின் அதீத பயத்தில் உன் அற்புத அழகை காண முடியாமல் போயிற்று உன் விரல்கள் பற்றுகிற சுகமும்  உன் புன்னகை ரசிக்கும் காலமும் முத்தங்களின் அரிய சுவையும்  அணைத்துத் தூங்கும் பொழுதுகளும்  அதிகாலையில் தருகிற தேநீரின் கதகதப்பும் இல்லாமல் போய்விட்டன நீயின்றி நீ இன்றி வாழும் இக்காலம் இரக்கமற்றதாய் நீடிக்கிறது திறந்து கிடக்கும் பெருவெளியில் பயணங்களைத் தொடர மனமிருந்தும் அபாயம் நீங்காத சூழல் தடுத்து நிறுத்துகிறது ஆயினும் ஏதோ ஒரு நாள் உன் கதவுகளை தட்டுவேன் அப்போது மழைக்காலத்தின்  குளிர்மையில் நம் உடல்களின் வெப்பத்தில் கரைந்து போவோம் அன்பே...
Image
எக்கணமும் நீ என்னில் வியாபித்திருக்கிறாய் உன்னைத் தவிரவும் வேறு எதுவும் என்னை ஈர்க்கவில்லை நட்சத்திரம் காண்கையில் நட்சத்திரம் ஆகிறாய் தீண்டும் போது காற்றாகிறாய் என் கால்கள் நனைகையில் அலை ஆகிறாய் வணங்கும்போது தெய்வம் ஆகிறாய் மரத்துக்குக் கீழே நிற்கும்போது நிழல் ஆகிறாய் நீந்தும் வேளை நீர் ஆகிறாய் காதலில் உறைகிற வேளை நீ என்பது காட்சிகளில் பரிணமிக்கிறாய் நீ ஒரு தொலைவில் நான் ஒரு தொலைவில் இருந்த போதும் நீ என்னருகில் இருப்பதாகவே கொள்கிறேன் ஊரடங்கு காலம் முடிந்த பின்னும் உன்னைக் காணும் காலம் இன்னும் தோன்றவில்லை ஆயினும் உன்னைக் காணும் பொழுதினை முடிவு செய்துவிட்டேன் ஆகையால் நமக்கான நம் இரவினை தயார் செய்து கொள் ஊடலை முடித்து கூடலில் ஆழம் காண்போம் அன்பே ...
Image
எங்கோ அகவும் மயிலின் தனிமையில் இரவு எதற்காகவுமின்றி விழித்திருக்கிறது இமை மூட மனமின்றி காத்திருக்கும் மனிதர்கள் எதையோ யோசித்துக் கொண்டிருப்பார்கள் அதில் எண்ணற்ற வேதனைகள் கவலைகள் இருக்கக்கூடும் இந்த பூமியில் எதற்காக என்று தெரியவில்லை யாரின் மீதும் எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை எல்லாம் பொய்யின் வடிவமாக நீடிக்கிறது எதிரில் இருப்பவன் நல்லவன் போல நடிக்கிறான் அது பேர் ஆபத்தானது ஒரு பெண்ணின் மீதான காதல் மட்டுமே வாழ்தலின் அர்த்தத்தை மெய்ப்பிக்கிறது வேறொன்றும் மற்ற மனிதர்களிடம் சாதித்துக் கொள்ள எதுவுமில்லை ஆகையால் உன்னிடம் மட்டுமே இருந்து கொள்ளுதல் சாலச் சிறந்தது அதை நீ புரிந்து கொள்கிறவேளையில் மரணம்கூட அற்புதமாக நடந்து விடும் அதற்காகவே தான் நீ எவ்வளவு என்னை சாடினும் உன்னைச் சுற்றி வருகிறேன் நீயோ தனிமையின் தீவிரத்தில் என்னை உதாசீனம் செய்கிறாய் அதை விட்டுவிடு யாவும் நலமாக ஈடேறும் அன்பே ...
Image
இருட்டும் வெளிச்சமும் கூடிய ஒரு பொழுதில் உன்னைத் தவிரவும் வேறெந்த சிந்தனையும் இல்லை நீ அவ்வளவுக்கு என்னை ஆக்கிரமித்து விட்டாய் நீ கிளையெனில் நான் ஒரு மலர் நீ முறிந்துபோனால் நான் உதிர்ந்து போவேன் நீ கடலெனில் நான் ஒரு மீன் நீ வற்றினால் நான் செத்துப் போவேன் நீ காற்றெனில் நான் பழுத்த இலை விழுந்து போவேன் நீ தாமரை எனில் நான் ஒரு இதழ் காய்ந்து போவேன் நீ பட்டுப்பூச்சி எனில் நான் இறக்கைகள் சிதிலமாவேன் உனக்காய் என்னைத் தியாகம் செய்கிறேன் என்னைத் துறப்பேன் நீ இல்லாத இந்த பொழுதில் உன்னை வேண்டி நிற்பேன் ஒன்றும் நடக்காது ஆயினும் ஞாபகத்தில் இருக்கும் உன் உருவில் உயிர்த்துக் கொள்வேன் அன்பே ...
Image
உன்னைத் தவிரவும் யாரையும் நினைத்திராத போதும் நீ ஏன் யாரையோ நினைத்து கொண்டதாக நினைத்தாய் இதில் என் தவறு ஒன்றுமில்லை நீயே மூலகாரணம் உன்னை கேள்வி கேட்டுக் கொண்டாய்  எனில் அது உனக்கு விளங்கும் இப்போது என் மீது விழும் மழைத்துளிகள் உன் ஈர இதயத்தை நினைவூட்டுகின்றன என்னை நீ முழுதாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் உன் சந்தேகங்கள் மழையில் முளைத்த காளான்கள் போல முளைத்த வண்ணம் இருக்கும் நீ அதற்கு இடம் கொடாதே திறந்து கிடக்கும் இதயத்தில் உன்னைத் தவிர வேறு யாரையும் அனுமதிப்பதில்லை இதுவே காதல் அதைப் புரிந்துகொள்ள மறுக்கிற உன் இதயம் மிகவும் பலவீனமானது இப்போது குளிர்ந்த இரவில் மயில் அகவுகிறது அதில் உன் குரலை மட்டுமே கேட்கிறேன் உன் காதலை மட்டுமே உணர்கிறேன் இது வெறும் பொய்யல்ல இதுவே என் மெய்யுரை முடிவெடுத்துவிட்டேன் நீயே என் வாழ்வின் சகலமும் ஆனதாக இனி நீதான் என் நம்பிக்கை என் உயிர் என் மரணம்.
Image
ஏனோ தெரியவில்லை இந்த பேரிடர் காலத்தில் தனிமையின் ஆழம் விபரீதமாக இருக்கிறதென்று இரவும் பகலும் வந்து வந்து சிந்தனைகளுக்குள் ஊடுருவி வார்த்தைகளின் பக்கம் தூக்கி எறிகிறது எழுதி எழுதி மாய்ந்த வேளை எதுவும் துளியும் புரியவில்லை அன்பாக இருப்பினும் கோபத்தில் இருப்பினும் எல்லாம் சற்று நேரம்தான் ஒரு நதியின் சலசலப்பை கேட்க முடியாத காலத்தில் எதுவும் பிடித்தமானதாக இல்லை நான்கு சுவர்கள் வெறுப்பின் உச்சம் இரவில் மொட்டை மாடியில் குளிர்ந்த காற்றில் சிறு தூறலில் கொஞ்சம் ஆசுவாசம் வேறொன்றும் புதிதாக இல்லை ஏன் இந்த உலகு ஏன் இந்த மனிதன் ஏன் இந்தப் பிறப்பு கடக்கும் காலத்திற்கு எது பற்றியும் அக்கறை இல்லை காதலின் பால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைப்பது பேதைமை வேற எதுவும் இல்லாத இந்த வாழ்வில் இறப்பை மட்டுமே வரவேற்க முடியும் கல்லறைத் தோட்டத்தில் கனவுகளில் மரித்த உடல்கள் எதுவும் செய்வதற்கில்லை இருண்ட உலகில் ஒளிதரும் நம்பிக்கை தவிர இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை ....
Image
ஆகாய வீதியில் மஞ்சு பொதிகள் அமைதியில் உறைந்திருக்கின்றன தனிமையில் இருக்கும் உன்னைப்போலவே என் இருப்பின் இடையே இருள் அமர்ந்திருக்கிறது என்னைப்போலவே நீயும் நானும் தனித்தனியே நம்மை நினைத்தபடி நினைவுகளால் இணைந்திருக்கிறோம் இதுவே காதலின் உன்னதம் காற்றில் அசையும் மரங்களில் உன் குரலின் இசையை அறிகிறேன் அது பேரானந்தத்தின் தொடக்கம் என்னை உன்னிடம் அனுமதிக்காத காலத்தில் வார்த்தைகளின் வழியே உன்னைத் தொட்டு உணரும் சக்தியை கவிஞனாய்ப் பெற்றிருக்கிறேன் உன் படுக்கையின் மீது நீ மட்டும் இல்லை நானும் இருக்கிறேன் என்பது எத்தனை அழகானது நித்திரையில் எல்லா இரவுகளும் நான் மட்டுமே கனவாய் வந்து கொண்டிருப்பேன் அதை நீ சொல்லாவிடினும் அறிந்து கொள்வேன் அதுவே நம் காதலின் மகத்துவம் கனத்த இருட்டில் ஒளி தரும் கற்பனையில் வடிவான உன்னில் இப்போது முத்தமிட தொடங்கிவிட்டேன் மிகப்பெரிய வானம் என்னுடன் இருக்கிறது உன்னைப் போலவே அன்பே ....
Image
ஒவ்வொரு தூறலும் நீயாய் இருக்கிறாய் நனைய நனைய சுகம் நீளும் இரவில் எத்தனை நாழிகைகள் இப்படியே அமர்ந்திருப்பேன் மழைத்துளிகள் நீயான பின் எனக்கு வேறு போக்கிடம் இல்லை தனித்த வீட்டிற்குள் இருக்கும் நீ நான் மழையாக உன்னை அனுபவிப்பதை அறிவாயா அறிந்து கொள் என் பெண்ணே அதிகாலை தோன்றும் சூரியனிலும் உன் ஒளியையே உணர்வேன் இதுவல்லவோ அதிசயம் நீ என்பது மாபெரும் இயற்கை ஒவ்வொன்றிலும் உன்னை தான் நுகர்வேன் இந்த பைத்திய நிலை தான் உன் மீதான பெரும் காதல் எனைத் தீண்டும் காற்றிலும் காற்றாக இருப்பதை அறிவாயா அறிந்து கொள் என் பெண்ணே உன்னை விட உயர்ந்ததாக என்னும் யாவிலும் நீயேதான் இருக்கிறாய் என்னை சந்தேகிக்காதே உன் உயிர் துடிக்கும் ஓசையில் நான் இருப்பதை மறந்து விடாதே அது போதும் இந்த ஜென்மம் கடந்து விடுவேன் அன்பே ....
Image
என் அதிகாரத்தால் எந்த பயனும் இல்லை நான் ஒரு நாடோடி என் கருத்துக்களை எவனும் மதிப்பதில்லை அதற்காக நான் வருந்துவதும் இல்லை உணவில்லாத என் தட்டை நான் வேடிக்கை பார்ப்பேன் பசி கொடுமை எனினும் பசித்திருத்தலில் உலகத்தின் கொடுங்கோன்மை புரியும் நீ எதையும் செய்யாதே உன் வாழ்க்கை அதல பாதாளத்தில் விழுந்து விடும் என்பார்கள் நான் செய்வதறியாது என்னுடன் பேசிக் கொள்வேன் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நற் பயனுமில்லை இனியும் என்ன இருக்கும் என்று தெரியவில்லை நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்கள் என் பதைபதைப்பு என் நடுக்கம் அது எல்லாம் பற்றி உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை முக்கியமாய் உண்மையாக இருக்கக் கூடாது அதுவே உங்கள் கட்டளை நான் தனி ஒருவனாய் இவ்வுலகின் துரோகங்களை சரி செய்துவிட முடியாது நான் நிலவைப் பார்த்து கவிதை எழுத தகுதியானவன் என்பதை முடிவு செய்து விட்டேன் நீங்கள் இனி உல்லாசமாய் இருங்கள் சமூகமே ...
Image
உன்னைத் தவிரவும் காண்பது யாவும் வானவில் அற்ற வானத்தை உற்று நோக்குவது போன்றது உனக்கு இதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன் அருகிலிருந்து உன்னிடம் பேசிய வார்த்தைகள் இப்போது ஞாபகம் ஆகிவிட்டது பெருந்துயரம் அதை விடவும் உன் விரல் பற்றி உன் இதழ் கவ்வி இரவை எழுதிய பொழுதுகள் தொலைந்துபோனது பெரும் வேதனை நமக்கான பாதைகள் திறந்துவிட்ட போதும் உன்னைக் காணும் என் பயணத்தின் தேதி இன்னும் முடிவாகவில்லை இருட்டுக்குள் ஒளிரும் சுடர்களை போல உன் முகம் வந்து வந்து போகிறது முத்தம் கொடுக்க துடிக்கும் உதடுகள் மௌனத்தில் உறைந்து இருக்கின்றன நீடித்திருக்கும் என் உயிரில் நீதான் துடித்த வண்ணம் இருக்கிறாய் நான் இந்த பூமியில் எத்தனை வருடங்கள் நீடிப்பேன் என்று தெரியவில்லை நானும் உன்னை காணும் நோக்கத்தில் எனக்கான விடியல்கள் வந்துகொண்டிருக்கும் அன்பே ....
Image
எனவே எந்த சத்தமும் இல்லை அது ஒரு இரவு மழை போய்விட்டது குளிரும் என்னில் கதகதப்பு இல்லை தனிமை சிந்தனையைத் தூண்டுகிறது அதில் ஏன் பிறந்தேன் என்ற கேள்வி தோன்றுகிறது ஏன் இறக்கப் போகிறேன் என்று கேள்வியும் பிறக்கிறது இடைப்பட்ட ஆயுள் எதையும் செய்வது அறியாமல் எதையாவது செய்கிறது உயிருடன் இருப்பவர்கள் உயிருடன் இருக்கவே விழைகிறார்கள் உயிர் வாழ்வது பெரும் பிரயத்தனம் ஆகிவிட்டது எல்லோரும் சந்தேகிக்கிறார்கள் ஆட்கொல்லி நோய் என்னிடம் இருக்கிறதா என்று நானும் அவ்வாறு இல்லை இதற்கிடையில் காதல் நோய் வாட்டி வதைக்கிறது அதிலிருந்து எதையும் செய்ய முடிவதில்லை கண்ணீர் தவிர அங்க வேற எந்த ஊற்றும் இல்லை அது ஒரு மரணப் பள்ளத்தாக்கு பிழைத்து விட்டால் பேரின்பம் இல்லையேல் கல்லறைக்குள் போவது உகந்தது நான் நானாக இல்லை இதுவே பெருந்துயரம் காதல் ஆறுதலாக இல்லையெனில் மடிந்து விடலாம் கற்பனை உலகில் கவிஞன் வாழ்ந்து மறைவான்
Image
என் கண்ணே முழு நிலவின் அழகை விடவும் நீ அழகானவள் நீ அருகில் இல்லாத பொழுதுகள் துரதிருஷ்டவசமானது பேரிடர் காலம் உன்மீதான காதலை தீவிரப்படுத்துகிறது என் தனிமையை உன் நினைவுகளால் மாற்றிக் கொண்டேன் நீ இருந்தும் இல்லாது இருக்கிறாய் இது மிகப்பெரிய சோகம் என் விழிகள் உன்னைத் தேடித் சலிக்கின்றன ஆயினும் உன்னை அடையும் பாதைகள் திறந்துவிடும் நம்பிக்கைகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன விரைவில் உன் வீட்டுக்கதவை என் விரல்கள் ஒலி எழுப்பும் காலம் நெருங்கிவிட்டது காத்திருத்தல் வலி எனினும் சந்திக்கும் பொழுதுகள் அற்புதமானவை நீயும் நானும் பேசிக்கொள்ள எத்தனையோ இருக்கின்றன மேலும் காத்திருக்கும் உன்னிடம் என் பூரண இதயத்தோடு உன் வாசல் வருவேன் அப்போது நீ என்னை அள்ளி அணைத்துக் கொள் பிறகு என்னைக் கைவிட்டு விடாதே அன்பே...
Image
முழு நிலவின் ஒளியை கவிஞனின் கண்கள் பருகிக் கொண்டிருக்கின்றன அவனுக்கு அதைத் தவிரவும் சிறப்பான பணி வேறெதுவும் இல்லை உயிர்த்திருத்தல் ஒரு கலை எனினும் இறப்பதும் ஒரு கலையே கவிஞனைப் போல நீங்கள் இல்லை கவிஞன் வேறானவன் உங்களை மகிழ்விப்பவன் அவன் செத்த பிறகு மகாகவி என்பீர்கள் சிலை வைப்பீர்கள் அதைத் தவிரவும் உங்களுக்கு எந்த நியாயமும் தெரியாது இப்படித்தான் பாரதி செத்துப்போனான் ,என்னைப்போன்ற கவிஞனும் செத்துப் போவார்கள் பிறகு நீங்கள் அவன் நினைவு நாளைக் கொண்டாடுவீர்கள் இந்த அற்ப புத்தி உங்களை விட்டு நீங்காது நானோ நிலவை ரசித்து நிலவின் கீழ் ஒரு கவிஞனாக விழித்திருக்கிறேன் கவிதை எளிதல்ல கவிஞன் அபூர்வமானவன் அவனை இருக்கும்போது கொன்று விடுங்கள் ,அப்புறம் கொண்டாடுங்கள் நூற்றாண்டு விழாக்களை நான் இருக்கும்போதும் கவிஞன் இல்லாத போதும் கவிஞன் வருகிறேன் நிலவின் ஒளியில் மறைந்து கொள்ள போகிறேன்  அது போதும் எனக்கு
Image
சத்தமின்றி ஒடுங்கிக் கிடக்கும் இரவில் முடிந்த மழையின் ஒரு துளி சொட்டும் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது குளிரும் நடுக்கமும் கூடிய பொழுதில் ஆகாயத்தைப் போன்ற விரிந்த தனிமையில் அருகில் வந்து போகும் உன் முகத்தில் ஒரு முத்தமிட்டு வெப்பத்தில் வீழ்கிறேன் எப்படியாயினும் நான் மட்டுமே தனித்திருக்கும் கொடுந்துயரில் நீ இல்லாதிருப்பது மரணத்தை விடவும் கொடிய வேதனை உன் வீடு அடையும் பாதைகள் தெரிந்திருந்தும் பயணங்களை நிகழ்த்த முடியாத துர்பாக்கியவானாய் இருக்கிறேன் எனக்கான அந்த சதுர அறை வாஞ்சையோடு வரவேற்ற அந்த நாட்கள் இப்போதும் நிழலாடுகிறது நீ வேண்டும் என்று நினைக்கும் இந்த மனதிற்கு என்னால் ஆறுதல் கூற இயலவில்லை காலம் தந்த சதியில் நீயும் நானும் சந்தித்து உறவாடுவதை நீட்டிக்க முடியவில்லை பெரும் நோய்த்தொற்று காலத்தில் உயிர் பிழைத்திருத்தல் உன்மீதான காதலே ஆகும் ஆயுள் முடிவதற்குள் மறுபடி உன்னை ஆலிங்கனத்தில் வீழ்த்தி மீண்டும் மீண்டும்  உன்மீதான பெரும் நேசத்தைப் பறைசாற்றுவேன் என் நீங்கி விட முடியாது அன்பே ....
காற்றும் சிற்சிறு இலைகளும் 1 படுக்கும் அறைக்குள் சிற்சிறு இலைகள் மரத்தில் உயிர்த்திருந்தவை பயங்கர காற்றில் மூச்சிழந்து உயிர் துறந்து இறுதி யாத்திரையில் என்னிடம் வந்துவிட்டன சுற்றிலும் வெற்றுடல்களில் சுவாசித்துக் கிடக்கும் என்னுடல் இதற்கு முன் கண்டிருந்த சடலங்களின் நினைவில் கலக்கமுற்றது இறந்துபோனவர்கள் என்னருகில் இருப்பது போன்ற மாயை வேறு உதிர்ந்தவை யாவும் மாண்ட உடலங்களை நினைவூட்டதாகவே இருப்பது இந்த தனித்த இரவின் துயரை கனக்கச் செய்துவிடும் போலும் வரவிருக்கும் நித்திரை மீது இந்தச் சருகுகள் சாவுமேளத்தை இசைக்காமலிருக்க வேண்டும். *** 2 பெருங்காற்று மரங்களுக்கு போதை ஊட்டி கிறுகிறுக்க செய்து அதன் உயிரான இலைகளைச் சிதைத்து என் வீட்டினுள் தூக்கியெறிந்தது பரிதாபத்தில் என்னருகில் இருத்திக்கொண்டேன் மரத்திலிருந்தால் சப்தமிட்டுக்கொண்டிருக்கும் இப்போது அதற்கு எந்த வாய்ப்புமில்லை உயிர்ப்பான காலத்தைக் காற்று பறித்துவிட்டது நான் துடிக்கும் என்னிதயத்துடன் துடிப்படங்கிய உடல்களைத் தரிசித்தேன் மரணம் தரிசனத்துக்குரியது துக்கப்படவோ வேதனைப்படவோ ஒன்றுமில்லை அருகிலிருந்த அவற்றின் ...
Image
ஒற்றை நட்சத்திரம் போல உன்னை விட்டு தொலைவில் இருக்கிறேன் உன்னைக் காணும் பொருட்டு இரவெல்லாம் விழித்திருக்கிறேன் உன்னை காணாத என் இமைகள் வலியில் துடித்துப் போகின்றன ஆனாலும் என் நம்பிக்கை வற்றி விடாது ஒவ்வொரு இரவும் உன்னைக் கண்டு விடுவேன் என்ற நினைப்பில் இருளுக்குள் உன்னை அலசி கொண்டிருப்பேன் வேறு யாரையும் பார்க்காமல் போனாலும் உன்னைக் காணவே உயிர்த்திருப்பேன் நீ என் ஆழ் மனதின் ரகசியம் உன்னைத் தவிரவும் இவ்வுலகில் பெரிதாய் வேறொன்றுமில்லை ஊரடங்கு காலத்தில் என் பயணங்கள் இறந்துவிட்ட போதும் உன்னைக் காணும் விருப்பத்தை கைவிடப்போவதில்லை ஒரு நாள் எனக்கான பாதைகள் என்னிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும் அப்போது உன் மடியில் ஓர் நட்சத்திரம் போல விழிகள் அசைத்து உன்னழகில் மெய்மறந்து கிடப்பேன் மேலும் நம் இரவுகளை ஒளிவூட்டுவேன் அன்பே....
Image
நடுநிசியில் மின்னல் வெட்டுகிறது வானம் மிகப்பெரிய வெளவால் கண்ணில் பட்டு மறைகிறது இது என்ன சகுனம் என்று புரியவில்லை யாரும் யாருடனும் இணக்கமாக இல்லை சொற்களில் எப்போதும் தீப்பிடித்து எரிகிறது தப்பான புரிதல் தவிர இங்கு எந்த நல்ல விஷயமும் நடைபெறவில்லை கல்லறைகளை செய்வதற்கே இவ்வுலகம் தயாராய் இருக்கிறது உயிர் வாழ்வது உன்னதம் எனினும் நடைமுறையில் அவ்வாறு அது இல்லை அபலையான ஓர் உயிர் செத்தபிறகு இந்த பூமி வருந்தும் அதில் ஒரு அர்த்தமும் மிஞ்சுவது இல்லை இப்படித்தான் எண்ணற்ற உயிர்கள் மடிந்து போய்விட்டன யாருக்கும் ஒரு லாபமும் இல்லை கண்ணீர் ஒன்றே கடைசியில் மிஞ்சும் பிறப்பு வாழ்தல் அன்பைப் பகிர்தல் யாவும் போலியின் வடிவங்கள் கலைஞனுக்கு கவிதைகள் தவிரவும் வேறொரு உலகம் இல்லை அதில் அவன் கடைசியில் மாண்டு போவான் அப்புறம் நினைவு நாளில் ஒரு சில பேர் நினைவு கூறுவார்கள் அத்துடன் எல்லாம் இனிதே முடிந்து விடும் மின்னல் வெட்டுவதும் வவ்வால் பறப்பதும் கவிஞனுக்கு புதிராகப் போகும்.
Image
இரவின் ஊடே ஆகாயமும் ஆகாயச் சுடர்களும் பூமியும் எதுவும் பேசவில்லை நான் மட்டும்  என்னிடம் எதையோ பேசிக்கொண்டே இருக்கிறேன் நான் ஆழ்ந்து சிந்திக்கிறேன் அதில் உலகின் அதிசயமும் ஆச்சரியமும் நிறைந்து வழிகின்றன இறப்பவர்கள் இறந்து போகப் போகிறவர்களும் இருக்கிறார்கள் கொடிய நோயின் பரவலால் எல்லாவற்றையும் மீறி நீ என் கவிதையில் கவித்துவமாக பொங்கி வழிகிறாய் அது ஏன் என்பதை இந்த மர்மமான காலம் அறிந்திருக்கக் கூடும் பயமும் பீதியும் நீடித்த உலகில் நீயும் நானும் இருப்பது பேரதிசயம் அது காதலின் மகோன்னதம் என் கல்லறை இன்னும் அமையாது இருப்பதன் காரணம் நீ உயிர்த்திருப்பதன் ரகசியம் என்று மட்டுமே சொல்வேன் உன்னருகில் இருக்கும் காலத்தில் நோய்த் தொற்று என்பது முடிந்து போயிருக்கும் அவ்வேளை உனக்கும் எனக்குமான கூடலில் இந்த பூமி அழகிய வசந்த காலத்தில் நிலைத்திருக்கும் உன்னை நானும் என்னை நீயும் காணாது காலங்கள் தொலைந்து போயிருப்பினும்  நம் காதல் மிகப்பெரிய உண்மையெனச் சொல்லிக்கொள்வேன் இறப்பு என்பது நிதர்சனம் எனினும் நம் காதல் நித்தியமானது அன்பே ...