இரவின் ஊடே ஆகாயமும் ஆகாயச் சுடர்களும்
பூமியும் எதுவும் பேசவில்லை நான் மட்டும் 
என்னிடம் எதையோ பேசிக்கொண்டே இருக்கிறேன்
நான் ஆழ்ந்து சிந்திக்கிறேன்
அதில் உலகின் அதிசயமும்
ஆச்சரியமும் நிறைந்து வழிகின்றன
இறப்பவர்கள் இறந்து போகப் போகிறவர்களும் இருக்கிறார்கள்
கொடிய நோயின் பரவலால்
எல்லாவற்றையும் மீறி
நீ என் கவிதையில் கவித்துவமாக பொங்கி வழிகிறாய்
அது ஏன் என்பதை இந்த மர்மமான காலம் அறிந்திருக்கக் கூடும்
பயமும் பீதியும் நீடித்த உலகில்
நீயும் நானும் இருப்பது பேரதிசயம்
அது காதலின் மகோன்னதம்
என் கல்லறை இன்னும் அமையாது இருப்பதன் காரணம்
நீ உயிர்த்திருப்பதன் ரகசியம்
என்று மட்டுமே சொல்வேன்
உன்னருகில் இருக்கும் காலத்தில்
நோய்த் தொற்று என்பது முடிந்து போயிருக்கும்
அவ்வேளை உனக்கும் எனக்குமான கூடலில் இந்த பூமி
அழகிய வசந்த காலத்தில் நிலைத்திருக்கும்
உன்னை நானும் என்னை நீயும்
காணாது காலங்கள் தொலைந்து போயிருப்பினும் 

நம் காதல் மிகப்பெரிய உண்மையெனச் சொல்லிக்கொள்வேன்
இறப்பு என்பது நிதர்சனம் எனினும்
நம் காதல் நித்தியமானது அன்பே ...

Comments

Popular posts from this blog