Posts

Showing posts from July, 2020
Image
நட்சத்திரங்கள் சிமிட்டாத வானம் இறந்து போய் கிடக்கிறது அதன் இறுகிய மௌனத்தில் என் தனிமை மறைந்து கொண்டிருந்தது இறந்து போனவன் இறந்து கொண்டிருப்பவன் இறக்கப் போகிறவன் நிலையாமையை உணர்த்துகிறார்கள் யாருக்காகவும் எப்போதுமிருக்கும் இயற்கை மடிந்து போகவில்லை எத்தனை காலம் இந்த பூமியில் நான் விழித்திருப்பேன் என்று சொல்வதற்கில்லை ஒரு நாள் சூரியோதயம் என்னை விட்டுப் போய்விடும் யார் யார் எதுவரை இருப்பீர்கள் என்று சொல்லத் தெரியவில்லை இருப்பு என்பது துயர் மற்றும் சொல்லவொண்ணா வேதனை இருக்கும் வரை ஆகாயம் அழகு நிலவும் நட்சத்திரங்களும் அழகு நீயும் அழகு என் அன்பே
Image
   பனிக் காற்றின் நினைவில் உன்னைத் தவிர வேறு யாருமில்லை  நீயோ உன்னை நினைக்கவில்லை என்கிறாய்  முறையிட எந்தக் கடவுளும்  உயிருடன் இல்லை  நான் என்பது நீயாகி விட்டபின்பு  நீ என்னை நம்ப மறுக்கிறாய் என் சொற்களில் நான் தற்கொலை புரிந்து கொள்கிறேன் இருட்டின் அமைதியில் உன்னுருவம் ஆகாய சுடர் போல் ஒளிர்கிறது உனக்கு எதுவும் தெரிவதில்லை நீ புனைவின் உச்சத்தில் என்னை சந்தேகிக்கிறாய் எதுவும் செய்ய முடியாமல் நான் என்னை நானே துன்புறுத்திக் கொள்கிறேன் பனிக்காற்று இப்போது கொல்கிறது நான் உணர்ச்சிகளின் பிழம்பு நீயோ காதலின் ஆழத்தைத் தேடுகிறாய் உன்னில் நான் உறைந்து விட்டேன் என்று சொன்னால் அது உண்மை இல்லை என்கிறாய் பயமுறுத்தும் இரவில் என் தனிமையில் பயத்தை நீக்க உன் கற்பனை உருவை அனைத்துக் கொள்கிறேன் நீ இல்லை எனில் இந்த வாழ்வு சூன்யம் அன்பே ...
Image
உன்னை தீண்டாத உடல் தனிமையில் உழன்று தவிக்கிறது இரவுகளைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை துன்புறுத்தும் உன் ஞாபகத்தில் ஈசலைப் போல செத்து வீழ்கிறேன் உலகம் என்னவோ பெரும் மாயையில் சிக்கி உழல்கிறது அடைபட்ட பாதைகளை உடைத்தெறிய முடியவில்லை கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமியை வைத்து இந்த பூமி நாடகமாடுகிறது உன்னை நானும் என்னை நீயும் சந்தித்துக் கொள்ளாத வேதனையை யாரும் அறிய முற்படவில்லை காதலைக் கொன்ற இந்த நோய்மை விரைவில் அழியும் காலம் நெருங்கிவிட்டது அன்பே என் சாபம் பலிக்கும் நாளில் உன்னிடம் வருவேன் உயிர்த்து இருப்பாய் பெண்ணே என் முத்தங்களில் உன் இரவை விழிப்படையச் செய்வேன் அதுவரை காத்திரு பின் இருட்டு நமக்கு சொந்தமாகி விடும்.
வீட்டிற்குள் வந்த பெரிய விட்டில் பூச்சி பயமுறுத்தியது போல தோன்றியது கொல்வதாக காகிதத்தில் சுருட்டி எடுத்து போனேன் உயிரைக் கொல்ல மனமில்லாமல் பறக்க விட்டேன் காகிதச் சிறையிலிருந்து விடுபட்ட அது பறந்து மறைந்த வேகத்தில் புரிந்துகொண்டேன் உயிர் பிழைத்தல் எத்தனை அதிசயமானது என்று.
வண்ணத்துப் பூச்சியை போன்று இறக்கைகள் முளைத்து விட்டால் சில கணமேனும் பறந்து அனுபவித்து மறைந்து போவேன்.
உன்னைப் பார்க்காத விழிகளின் கண்ணீரை போல இங்கு நல்ல மழை சொட்டுச் சொட்டாய் வடியும் நீர்த்துளிகள் மோதித் தெறிக்கும் இசையில் உன் பழைய சொற்கள் ஒலிக்கின்றன எதுவும் செய்ய முடியாமல்  என்னை நான் உணராமல் உன் நினைவின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிறேன் உன்னிடமிருந்து எந்த சைகையும் இல்லை மூடிக்கிடக்கும் உன் திசையில் மௌனம் பெரிதாய் பூத்துக் கிடக்கிறது உரையாடுவதற்கு யாருமில்லாமல் நிசப்தத்தில் உறைந்திருக்கும் சுவர்களை வெறித்துப் பார்த்து வெறுமையில் உழல்கிறேன் குளிரும் அறைக்குள் நடுங்கிய தனிமையில் உன் ஞாபகத்தின் மீது படுத்திருக்கிறேன் அநாதரவான காலத்தில் ஓர் அநாதையின் மனநிலையில் கைவிட்ட உலகத்தின் முன் நிற்கிறேன் என் மீதிருந்த இரக்கம் உன்னிடம் இல்லை என்பதை உணர்கிற போது விரக்தியில் விழுந்து மடிகிறேன் நீயற்ற இந்தப் பொழுதுகளில் நான் என்பது இல்லாததாகவே இருக்கிறது இளகிய இதயத்திலிருந்து எழும் என் குரல் உனக்கு கேட்டிருக்கக்கூடும் ஆயினும் கேட்காதது போலவே இருக்கிறாய் இரு நான் பெரிதாய் விரியும் தனிமையில் வெடித்துச் சிதறிப் போவேன். ஜுலை 20 - 10.39 / இரவு
Image
இரவின் தொடக்கத்தில் முளைவிடும் அந்த நட்சத்திரத்தை இன்று காணவில்லை அதனுடனான உரையாடல் மிகவும் பிடிக்கும் சிலவேளைகளில் சொற்கள் கசப்பை உமிழ்ந்துவிடுகின்றன யாருடனான பயணத்திலும் ஏதேனும் ஒரு கணத்தில் உணர்ச்சிகள் சீண்டப்பட்டுவிடுகின்றன இதயங்களுக்கு இடையே கீறல்கள் வாஞ்சை என்பது போய் பகை தோன்றி எழுந்து நிற்கிறது நீளும் இடைவெளியில் முறியாத காதல் மட்டும் இமை திறந்து அணைத்து முத்தமிடக் காத்திருக்கிறது ஒவ்வொரு அந்தியிலும் அந்த விண்மீனின் வருகை எப்போது நிகழும் என தகித்திருக்கிறது மனம் திரும்பவும் வரும்வேளை மன்னிப்பைக் கோருவேன் அப்போதைய ரம்மியமான சிமிட்டல்களில் மீண்டும் மெய்யுருகும் சம்பாஷணையைத் தொடங்கிவிடுவேன் பின் இரவுகளில் நட்சத்திர நினைவோடு உறங்கிக்கொள்வேன். July 19 - 8.02 மாலை
Image
நடுநிசியில் காகத்தின் கரைதலில் என் மனமும் இருந்தது என் தனிமையை மீட்டெடுக்க எதுவும் உவப்பானதாக இல்லை நான் இருக்கிறேன் என்பதை விடவும் இல்லாமல் இருக்கிறேன் என்பதே உண்மை இது உங்களுக்கும் பொருந்தும் பேசாத இருளில் எனக்குள் பேசும் என்னுள் விரக்தி தவிர வேறொன்றுமில்லை எதுவும் நித்தியம் இல்லாதது இரவு தந்த போதையை உன் சத்தமற்ற குரலால் கொண்டாடுகிறேன் நீ ஒரு தேவதை எனச் சொன்னாலும் உன் சொற்கள் துன்பமானது என்னால் இவ்வுலகிற்கு எதுவுமில்லை ஞானத்தைக் கொன்று விடுகிறேன் இயல்பாய் இருத்தல் விபரீதமானது அது என் தவறும் கூட என்னைப்பற்றிய புரளிகள் உன்னை மகிழ்விக்க கூடும் என்னைத் தவிர என்னிடம் யாருமில்லை யாரும் எதுவும் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள் நான் என் சவப்பெட்டி செய்து கொண்டிருக்கிறேன்.
Image
பின்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான் முன்னால் இருப்பதெல்லாம் அவனை விட்டு நழுவிச் செல்கின்றன பின்னால் இருப்பவை எல்லாம் அவன் முதுகைப் பதம் பார்க்கின்றன முன்னால் செல்வதும் பின்னால் ஓடுவதுமாக இருக்கிறான் ஓடுதல் நிற்கவே இல்லை மூச்சு முட்டியும் எங்கும் அமர முடியவில்லை அவனை அவன் மறக்கும் போது தான் ஓய்வு என்பது நிச்சயமாகலாம் நாலாபக்கமும் பாய்ந்து வரும் சொற்கள் அவன் கழுத்தை நெறித்துப் போடுகின்றன ஓடும் கால்களில் விரல்கள் தேய்ந்து உதிரத் தொடங்கின ஆயினும் அவன் முன்னும் பின்னும் ஓடுவதை விடுவதாயில்லை ஓடுதல் கலை என்பதை புரிந்து இருக்கிறான் கலைக்காய் ரத்தம் சிந்துவதை பொருட்படுத்தவில்லை ஆயுள் கரைந்து ஒழுகிய பின்னும் ஓடுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை நமக்கிடையே அவன் ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை உங்கள் கவனக் குவிப்பை விடவும் முன்னும் பின்னும் ஓடுதல் அவனுக்குப் பிரதானமானது அதுவே அவன் சாகசமும் கூட.
Image
  உச்சி வெயிலின்  தாக்கத்தைப் போல அவள் குரல் கேட்காத திசைகள் வதைக்கின்றன பறவைகள் எல்லாம் பயந்துபோய் மர நிழல்களில் பதுங்கி இருப்பதைப் போல அவளின் பழைய உரையாடலில் புதைந்து இருந்தேன் ஆழ்ந்த மௌனம் சூழ்ந்த சுவர்களுக்குள் நான் என்பது புத்தகம் போல் மூடிக் கிடந்தது கசங்கிய மூளையில் நரகத்தின் வாயில் திறந்து கிடந்தது தூரத்திலிருந்து வந்த அழைப்பு ஒன்றில் மரணபயம் வந்து போனது பகலிரவுகளைக் கடந்து கடந்து வாழ்வின் மீது வெறுப்பை உமிழ்ந்து உமிழ்ந்து கொண்டாட்டங்களைத் தொலைத்துக் தொலைத்து ஊரடங்கில் அடங்கி அடங்கி நோய்த்தொற்றுக்கு நடுங்கி நடுங்கி தனிமைப்படுத்துதலில் காலம் கடக்கையில் வாஞ்சையோடு பேசும் குரல்களும் மரித்துப் போயின யாருக்காக இங்கிருக்கிறேன் என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறேன் இருப்பின் பொருள் புரியாமலும்.
Image
போய்விட்ட மழையின் ஈரத்தை படர்ந்த வெளியில் ஒரு பறவை நடுங்கிய குரலில் இசைக்கிறது நீயோ அதைக் கேட்கும் தூரத்தில் இல்லை நானோ அதன் இசை மொழியை உன் சொற்களாக்கிக்கொள்கிறேன் குளிர் தென்றல் பரவும் காலையில் மிகக்குறைந்த சூரிய ஒளியில் மழைக்காலத்தின் பருவத்தை நீயாக உணர்கிறேன் இரவின் பாதாளத்தில் விழுந்திருந்து நீயற்ற கனவை உதறி ஒளி குன்றிய கணங்களின் மீது உன் நினைவைச் சுமந்து அமர்ந்திருக்கிறேன் உன் இரவைக் கடந்து விட்ட நீ திறந்த உன் இமைகளில் என்னை பார்த்திருப்பாய் உனக்கும் எனக்குமான இடைவெளியில் நம் ஞாபகங்கள் மிதந்தலையக் கூடும் தனிமையை தந்துவிட்ட காலத்தால் நிகழ்ந்துவிட்ட பிரிவு பெரும் பாறையில் சிக்கிய வலியினை தந்துவிட்டது கருணையும் காதலும் ததும்பிய வார்த்தைகளை உன்னருகில் இருந்து கேட்க வேண்டும் பேரிடர் முடிந்தபின் வந்துவிடும் பனிக்காலத்தில் உன் இதயத்தைத் திறந்து உன்னிடம் வருவேன் என் அன்பே .... July 10 /2020 மதியம் 12.44
Image
  வெளியெங்கும் உறக்கமில்லாத மழை  தலையணையில் புதைந்த நித்திரை ஏதோ ஒரு பயத்தில் பதுங்கியிபடி ஜன்னல் வழி வரும் குளிர்காற்றில் தீண்டுமவள் புரண்டு படுத்தேன் சாமத்தில் விழித்திருக்குமென்னை சத்தமிடத் தொடங்கினாள் சமாதானப் பேச்சுக்கள் எடுபடவில்லை நானும் அவளும் சண்டையிட இரவு நடுங்கிக்கொண்டு ஒதுங்கிச் சென்றது ஓரத்திற்கு வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற நான் வெளியேறினேன் மழை சாரலாய்ச் சுருங்கி இருந்தது கலங்கிய நிலவு என்னை வரவேற்பது போல் இருந்தது ஓரிரு நட்சத்திரங்கள் கண் சிமிட்டின அங்கும் அவள் வந்துவிடுவாள் போல் தோன்றியது மீண்டும் அறைக்குள் வந்தேன் தலையணையில் ரௌத்திரம் அவளாகிக் கிடந்தது.
Image
  நிதானமாய் யோசித்து மெதுவாய் வா புத்தா நீ எப்போதும் போலவே ஆழ் துயிலில் இரு உன்னை துன்புறுத்த விரும்பவில்லை உன் கனவுகளில் பசியாற நாங்கள் உண்டு களித்து இருப்பதைப் பார்த்து இருப்பாய் ஆனால் இங்கு நடப்பதெல்லாம் தலைகீழ் அதை நீ அறிந்திருக்க மாட்டாய் அமைதியை அனுபவித்து மெதுவாய் வா மூடை மூடையாக சேர்ந்திருக்கும் துன்பங்கள் உன் பிரசங்கத்திற்காக காத்திருக்கின்றன வாழ்வில் இருந்த வசந்தம் எல்லாம் போயே விட்டது இங்கு எல்லா கணங்களிலும் சருகுகளே உதிர்ந்து கொண்டிருக்கின்றன மரணச் செய்திகளே அதிகம் உலாவரும் காலத்தில் இருக்கிறோம் சுகங்களைத் துய்த்து நாட்கள் ஆயிற்று நதியின் வெள்ளப் பெருக்குப் போன்று கண்ணீர்த் துளிகள் எங்கும் பசித்தவனுக்கு சோறில்லை உழைப்பவனுக்கு வருவாய் இல்லை குழந்தைகள் பட்டினியில் கதறுகிறார்கள் எதற்கும் வழியற்றவன் தூக்குக்கயிற்றில் தொங்குகிறான் நீ துன்பத்தை விரட்ட யோசனைகள் சொன்னவன் மீந்து இருப்பவர்கள் இறப்பதற்குள் வந்துவிடு இல்லையேல் உன் சிலையை உடைத்து இறப்பவர்களை எரித்து விடுவோம் புத்தா துன்பம் சாம்பல் ஆவது ஆகட்டும்.
Image
நினைவு ஒரு நட்சத்திரம் இரவு நிசப்தத்தில் வீழ்த்துகிறது உலகை விரிந்த ஆகாயமும் விரிந்த நிலமும் ஒரு துளி ஓசையின்றி கிடந்தன திடீரென்று அழும் ஒரு குழந்தையின் அழுகுரல் நிச்சலனத்தைக் கீறியது சலனமற்ற இருட்டில் அதன் அதிர்வற்ற பொழுதில் அவளின் நினைவு ஒரு நட்சத்திரம் போல உதித்தது அதன் மினுமினுப்பில் அவளின் வனப்பு கூடலற்ற பொழுதில் விரியும் கற்பனையில் ஏக்கங்கள் உயிர் பெற்றன அடர் தனிமை புனைவைக் கைப்பற்றி கலவிக்கு சென்றது எங்கும் சென்று விட முடியாத விரக்தியில் களிப்புகள் மடிந்து போயின காலடியில் சுற்றும் கிருமி உயிரை மோப்பம் பிடித்தது உயிரே பிரதானமான வேலை வீடுகள் சமாதிகள் ஆகிவிட்டன நோய்த் தொற்றி விடும் பயத்தில் யாரும் யாரையும் பார்ப்பதில்லை வாழ்க்கை சவப்பெட்டிக்குள் தள்ளிவிட்டது இரவைப் போலவே இருண்டுவிட்டது யாவும். ஜூன் 16 இரவு 11.23
Image
அந்த ஆழ்ந்த இரவின் அமைதியில் உன் வீட்டின் ஜன்னல் வழியே நுழைந்த காற்று நம்மைத் தீண்டிக் காதலின் பாடலைத் தொடங்கிற்று பரிமாறும் விரல்களில் உன் காமம் நடுங்கியது வெறுமை சூழ்ந்த கட்டிலில் இரவு விழிகளைத் திறந்திருந்தது உன் இமையோரம் துளிர்த்திருந்த தாபத்தில் என் பார்வைகள் புரண்டன திடீரென பெய்த மழையில் சாரல்கள் தெறித்து உன்னை நனைத்த போது வெப்பத்தைத் துளாவியது உன்னுடல் குளிர்மை விரவிய அறையில் இதழ்கள் கவ்விக் கொண்டபோது மின்னல்கள் வெட்டின அப்போது அவ்விரவை ஏதோ ஓர் இசைக்கலைஞன் மீட்டியது போலிருந்தது இச்சையில் கணங்கள் தீப்பிடித்து எரிந்தன ஒன்றல்ல இரண்டல்ல முத்தங்கள் எத்தனை என்று வரையறுக்க முடியாத அந்த நாள் எப்போது வருமென தவிப்பில் தத்தளிக்கிறது மனம் புதையுண்ட தனிமையில் உன் அதரங்கள் மீட்டிய அரிய இசையில் உயிர்த்திருக்கிறேன் அன்பே ... மாலை 4 30, 6/7/20
அங்கு காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது மரங்களெல்லாம் தலைவிரி கோலமாய் ஆடுகின்றன கனத்த மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது வானம் இருட்டி பகல்பொழுது இருள் ஆகிறது சற்று நேரத்தில் அந்த இருவரின் மூச்சு நின்றதைப் போல மயான அமைதி குற்றங்கள் நடந்து முடிந்தது இனி சாட்சிகள் மறைந்து போவார்கள் புதுக்கதையின் அத்தியாயங்கள் நம்பமுடியாத கற்பனைகளால் நிரம்பிவிடும் தண்டனைகள் எரிந்து சாம்பலாகும் குற்றவாளிகள் நிரபராதி ஆகிவிடுவார்கள் நிவாரணத்தை வைத்துக்கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களால் என்ன செய்துவிட முடியும் நீதிமன்றத்தின் சுவர்களில் கறைகள் படிந்து வெகு நாட்களாயிற்று.
Image
அந்த முத்தங்களைத் தந்து விடு காய்ந்த நிலமான கன்னங்கள் மழைப் பொழிவில் மண் குழைவாகட்டும் நீ இதழ்கள் பதித்து தந்திருந்த எதுவுமில்லாமல் விழிப்பின்றி நீண்டு விடுகின்றன இரவுகள் அந்திப் பொழுதின் பறவைகள் போல நீ இல்லாததின் பொருளை உரக்க இசைக்கிறேன் பாதாளத்தில் கவிழும் என் தனிமையை உன் விரல்கள் வந்து தாங்காதா என்று ஏங்குகிறேன் அணைத்து உனக்குள் ஊடுருவிய காலங்கள் கனவுகளின் மீது அமர்ந்திருக்கின்றன பேசாத செங்கற்களின் நடுவே ஒரு செங்கலைப் போல அமைதியின் ஆழத்தில் வீழ்ந்திருக்கிறேன் இறந்துகொண்டிருக்கும் பகலில் விழிக்கும் இருளில் உறக்கம் வராத பொழுதில் உன் அதரங்களின்றி பரிதவிப்பில் உறையவிருக்கிறேன் நீயும் நானும் இணையாத கணங்களில் காதலில் இலையுதிர்காலம் கண்ணீரை உதிர்க்கிறது மழை வரும்போதெல்லாம் நினைவில் மீளும் உன் உதடுகள் என் மீது படர்ந்த சத்தம் கேட்கிறது ஆகையால் அந்த முத்தங்களைத் தந்துவிடு என் அன்பே ...
Image
உன் கீழ் படிந்து கிடக்கும் என் இதயம் கூரிய கத்திகள் போன்ற துயரங்களில் கிழிந்து சிதைந்திருப்பதைப் பார் என் உயிரைத் தக்க வைத்திருக்கும் அதனிடம் ஒரே ஒரு வேண்டுகோள்தான் பார்க்கும்வரை துடிப்பை நிறுத்தி விடாதே என்பது நிழல் போல் தொடரும் துன்பங்களில் அது மேலும் காயமுறத்தான் செய்யும் ஒவ்வொரு நாளின் விடியலையும் காட்டுகிறது ஒவ்வொரு நாளின் அஸ்தமனத்தையும் காட்டுகிறது இன்னும் இன்னும் அது பலவீனமடையத் தொடங்குகையில் என் இறப்பின் வாசலை அது திறப்பதாக கொள்ளலாம் என் காலம் முடியும் கடைசிக் கணங்களில் கூட கவிதையில் காதலித்து முத்தமிட்டு உன் பிரிவின் மீந்த கண்ணீர்த்துளிகளில் நனைந்து மறைந்திருப்பேன் அன்பே.
Image
ஆகாயத்தின் கீழ் அவளிருந்தும் எப்போதும் போலவே வழிகள் இருந்தும் பார்க்கும் துடிப்பு இருந்தும் ஏனோ இந்தத் துர்க்காலம்  அனுமதிக்கவில்லை அவள் ஞாபகமாகவே நாட்களின் மீது சுமைகள் கூடுகின்றன விரிந்த கடலின் காலிப் படகு போல இருக்கும் மனம் காற்று போன்றிருக்கும் அவளால் அசைகிறது இருட்டை துளைத்திறங்கும் வான் சுடர்கள் போல பார்த்திருந்த விழிகள் ஊடுருவி மறைகின்றன அவள் சுவடுகளின் மீது என் சுவடுகள் பதிந்த காலம் காதல் பொழுதுகளை மீட்டுத் தருகின்றன அந்திப்பொழுதில் இசைக்கும் பறவைகளில் முத்தங்களின் ஓசை கேட்கிறது சுவரின் மீது கொடிகள் போல என் மீது படர்ந்திருந்தவள் இரவுகளை சுகங்களில் ஆழ்த்தியிருந்தாள் ஒவ்வொரு வேளை பிரியும் போதும் கண்ணீர் துளிகளால் அணைத்து விடை தருவாள் போகும் பாதை பெரிதாய்த் திறந்து கிடந்தும் உன்னை அடைய முடியாத துரதிஷ்டசாலியாக இருக்கிறேன் அன்பே ...