அந்த முத்தங்களைத் தந்து விடு
காய்ந்த நிலமான கன்னங்கள் மழைப் பொழிவில் மண் குழைவாகட்டும்
நீ இதழ்கள் பதித்து தந்திருந்த எதுவுமில்லாமல் விழிப்பின்றி நீண்டு விடுகின்றன இரவுகள்
அந்திப் பொழுதின் பறவைகள் போல
நீ இல்லாததின் பொருளை
உரக்க இசைக்கிறேன்
பாதாளத்தில் கவிழும் என் தனிமையை
உன் விரல்கள் வந்து தாங்காதா என்று ஏங்குகிறேன்
அணைத்து உனக்குள் ஊடுருவிய காலங்கள் கனவுகளின் மீது அமர்ந்திருக்கின்றன
பேசாத செங்கற்களின் நடுவே ஒரு செங்கலைப் போல அமைதியின் ஆழத்தில் வீழ்ந்திருக்கிறேன்
இறந்துகொண்டிருக்கும் பகலில் விழிக்கும் இருளில் உறக்கம் வராத பொழுதில் உன் அதரங்களின்றி
பரிதவிப்பில் உறையவிருக்கிறேன்
நீயும் நானும் இணையாத கணங்களில்
காதலில் இலையுதிர்காலம் கண்ணீரை உதிர்க்கிறது
மழை வரும்போதெல்லாம் நினைவில் மீளும் உன் உதடுகள்
என் மீது படர்ந்த சத்தம் கேட்கிறது
ஆகையால் அந்த முத்தங்களைத் தந்துவிடு என் அன்பே ...

Comments

Popular posts from this blog