Posts

Image
நித்திரை வராத மழை இரவில் உன் ஞாபகம் சொட்டுச் சொட்டாய் என்னிலிருந்து வீழ்கிறது  கனத்த தனிமையில் அடர் இருளின் இடையே ஒளியற்ற வானம் போல இருக்கிறது இதயம்  எத்தனை மாதங்கள் பேரிடர் காலத்தில் நீயற்ற துயரத்தில் கடந்துவிட்டன பெரும் நோய்த்தொற்றின் அதீத பயத்தில் உன் அற்புத அழகை காண முடியாமல் போயிற்று உன் விரல்கள் பற்றுகிற சுகமும்  உன் புன்னகை ரசிக்கும் காலமும் முத்தங்களின் அரிய சுவையும்  அணைத்துத் தூங்கும் பொழுதுகளும்  அதிகாலையில் தருகிற தேநீரின் கதகதப்பும் இல்லாமல் போய்விட்டன நீயின்றி நீ இன்றி வாழும் இக்காலம் இரக்கமற்றதாய் நீடிக்கிறது திறந்து கிடக்கும் பெருவெளியில் பயணங்களைத் தொடர மனமிருந்தும் அபாயம் நீங்காத சூழல் தடுத்து நிறுத்துகிறது ஆயினும் ஏதோ ஒரு நாள் உன் கதவுகளை தட்டுவேன் அப்போது மழைக்காலத்தின்  குளிர்மையில் நம் உடல்களின் வெப்பத்தில் கரைந்து போவோம் அன்பே...
Image
எக்கணமும் நீ என்னில் வியாபித்திருக்கிறாய் உன்னைத் தவிரவும் வேறு எதுவும் என்னை ஈர்க்கவில்லை நட்சத்திரம் காண்கையில் நட்சத்திரம் ஆகிறாய் தீண்டும் போது காற்றாகிறாய் என் கால்கள் நனைகையில் அலை ஆகிறாய் வணங்கும்போது தெய்வம் ஆகிறாய் மரத்துக்குக் கீழே நிற்கும்போது நிழல் ஆகிறாய் நீந்தும் வேளை நீர் ஆகிறாய் காதலில் உறைகிற வேளை நீ என்பது காட்சிகளில் பரிணமிக்கிறாய் நீ ஒரு தொலைவில் நான் ஒரு தொலைவில் இருந்த போதும் நீ என்னருகில் இருப்பதாகவே கொள்கிறேன் ஊரடங்கு காலம் முடிந்த பின்னும் உன்னைக் காணும் காலம் இன்னும் தோன்றவில்லை ஆயினும் உன்னைக் காணும் பொழுதினை முடிவு செய்துவிட்டேன் ஆகையால் நமக்கான நம் இரவினை தயார் செய்து கொள் ஊடலை முடித்து கூடலில் ஆழம் காண்போம் அன்பே ...
Image
எங்கோ அகவும் மயிலின் தனிமையில் இரவு எதற்காகவுமின்றி விழித்திருக்கிறது இமை மூட மனமின்றி காத்திருக்கும் மனிதர்கள் எதையோ யோசித்துக் கொண்டிருப்பார்கள் அதில் எண்ணற்ற வேதனைகள் கவலைகள் இருக்கக்கூடும் இந்த பூமியில் எதற்காக என்று தெரியவில்லை யாரின் மீதும் எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை எல்லாம் பொய்யின் வடிவமாக நீடிக்கிறது எதிரில் இருப்பவன் நல்லவன் போல நடிக்கிறான் அது பேர் ஆபத்தானது ஒரு பெண்ணின் மீதான காதல் மட்டுமே வாழ்தலின் அர்த்தத்தை மெய்ப்பிக்கிறது வேறொன்றும் மற்ற மனிதர்களிடம் சாதித்துக் கொள்ள எதுவுமில்லை ஆகையால் உன்னிடம் மட்டுமே இருந்து கொள்ளுதல் சாலச் சிறந்தது அதை நீ புரிந்து கொள்கிறவேளையில் மரணம்கூட அற்புதமாக நடந்து விடும் அதற்காகவே தான் நீ எவ்வளவு என்னை சாடினும் உன்னைச் சுற்றி வருகிறேன் நீயோ தனிமையின் தீவிரத்தில் என்னை உதாசீனம் செய்கிறாய் அதை விட்டுவிடு யாவும் நலமாக ஈடேறும் அன்பே ...
Image
இருட்டும் வெளிச்சமும் கூடிய ஒரு பொழுதில் உன்னைத் தவிரவும் வேறெந்த சிந்தனையும் இல்லை நீ அவ்வளவுக்கு என்னை ஆக்கிரமித்து விட்டாய் நீ கிளையெனில் நான் ஒரு மலர் நீ முறிந்துபோனால் நான் உதிர்ந்து போவேன் நீ கடலெனில் நான் ஒரு மீன் நீ வற்றினால் நான் செத்துப் போவேன் நீ காற்றெனில் நான் பழுத்த இலை விழுந்து போவேன் நீ தாமரை எனில் நான் ஒரு இதழ் காய்ந்து போவேன் நீ பட்டுப்பூச்சி எனில் நான் இறக்கைகள் சிதிலமாவேன் உனக்காய் என்னைத் தியாகம் செய்கிறேன் என்னைத் துறப்பேன் நீ இல்லாத இந்த பொழுதில் உன்னை வேண்டி நிற்பேன் ஒன்றும் நடக்காது ஆயினும் ஞாபகத்தில் இருக்கும் உன் உருவில் உயிர்த்துக் கொள்வேன் அன்பே ...
Image
உன்னைத் தவிரவும் யாரையும் நினைத்திராத போதும் நீ ஏன் யாரையோ நினைத்து கொண்டதாக நினைத்தாய் இதில் என் தவறு ஒன்றுமில்லை நீயே மூலகாரணம் உன்னை கேள்வி கேட்டுக் கொண்டாய்  எனில் அது உனக்கு விளங்கும் இப்போது என் மீது விழும் மழைத்துளிகள் உன் ஈர இதயத்தை நினைவூட்டுகின்றன என்னை நீ முழுதாக புரிந்து கொள்ளாத பட்சத்தில் உன் சந்தேகங்கள் மழையில் முளைத்த காளான்கள் போல முளைத்த வண்ணம் இருக்கும் நீ அதற்கு இடம் கொடாதே திறந்து கிடக்கும் இதயத்தில் உன்னைத் தவிர வேறு யாரையும் அனுமதிப்பதில்லை இதுவே காதல் அதைப் புரிந்துகொள்ள மறுக்கிற உன் இதயம் மிகவும் பலவீனமானது இப்போது குளிர்ந்த இரவில் மயில் அகவுகிறது அதில் உன் குரலை மட்டுமே கேட்கிறேன் உன் காதலை மட்டுமே உணர்கிறேன் இது வெறும் பொய்யல்ல இதுவே என் மெய்யுரை முடிவெடுத்துவிட்டேன் நீயே என் வாழ்வின் சகலமும் ஆனதாக இனி நீதான் என் நம்பிக்கை என் உயிர் என் மரணம்.
Image
ஏனோ தெரியவில்லை இந்த பேரிடர் காலத்தில் தனிமையின் ஆழம் விபரீதமாக இருக்கிறதென்று இரவும் பகலும் வந்து வந்து சிந்தனைகளுக்குள் ஊடுருவி வார்த்தைகளின் பக்கம் தூக்கி எறிகிறது எழுதி எழுதி மாய்ந்த வேளை எதுவும் துளியும் புரியவில்லை அன்பாக இருப்பினும் கோபத்தில் இருப்பினும் எல்லாம் சற்று நேரம்தான் ஒரு நதியின் சலசலப்பை கேட்க முடியாத காலத்தில் எதுவும் பிடித்தமானதாக இல்லை நான்கு சுவர்கள் வெறுப்பின் உச்சம் இரவில் மொட்டை மாடியில் குளிர்ந்த காற்றில் சிறு தூறலில் கொஞ்சம் ஆசுவாசம் வேறொன்றும் புதிதாக இல்லை ஏன் இந்த உலகு ஏன் இந்த மனிதன் ஏன் இந்தப் பிறப்பு கடக்கும் காலத்திற்கு எது பற்றியும் அக்கறை இல்லை காதலின் பால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைப்பது பேதைமை வேற எதுவும் இல்லாத இந்த வாழ்வில் இறப்பை மட்டுமே வரவேற்க முடியும் கல்லறைத் தோட்டத்தில் கனவுகளில் மரித்த உடல்கள் எதுவும் செய்வதற்கில்லை இருண்ட உலகில் ஒளிதரும் நம்பிக்கை தவிர இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை ....
Image
ஆகாய வீதியில் மஞ்சு பொதிகள் அமைதியில் உறைந்திருக்கின்றன தனிமையில் இருக்கும் உன்னைப்போலவே என் இருப்பின் இடையே இருள் அமர்ந்திருக்கிறது என்னைப்போலவே நீயும் நானும் தனித்தனியே நம்மை நினைத்தபடி நினைவுகளால் இணைந்திருக்கிறோம் இதுவே காதலின் உன்னதம் காற்றில் அசையும் மரங்களில் உன் குரலின் இசையை அறிகிறேன் அது பேரானந்தத்தின் தொடக்கம் என்னை உன்னிடம் அனுமதிக்காத காலத்தில் வார்த்தைகளின் வழியே உன்னைத் தொட்டு உணரும் சக்தியை கவிஞனாய்ப் பெற்றிருக்கிறேன் உன் படுக்கையின் மீது நீ மட்டும் இல்லை நானும் இருக்கிறேன் என்பது எத்தனை அழகானது நித்திரையில் எல்லா இரவுகளும் நான் மட்டுமே கனவாய் வந்து கொண்டிருப்பேன் அதை நீ சொல்லாவிடினும் அறிந்து கொள்வேன் அதுவே நம் காதலின் மகத்துவம் கனத்த இருட்டில் ஒளி தரும் கற்பனையில் வடிவான உன்னில் இப்போது முத்தமிட தொடங்கிவிட்டேன் மிகப்பெரிய வானம் என்னுடன் இருக்கிறது உன்னைப் போலவே அன்பே ....