ஏனோ தெரியவில்லை
இந்த பேரிடர் காலத்தில்
தனிமையின் ஆழம் விபரீதமாக இருக்கிறதென்று
இரவும் பகலும்
வந்து வந்து சிந்தனைகளுக்குள் ஊடுருவி வார்த்தைகளின் பக்கம்
தூக்கி எறிகிறது
எழுதி எழுதி மாய்ந்த வேளை
எதுவும் துளியும் புரியவில்லை
அன்பாக இருப்பினும்
கோபத்தில் இருப்பினும்
எல்லாம் சற்று நேரம்தான்
ஒரு நதியின் சலசலப்பை கேட்க முடியாத காலத்தில் எதுவும் பிடித்தமானதாக இல்லை
நான்கு சுவர்கள் வெறுப்பின் உச்சம்
இரவில் மொட்டை மாடியில் குளிர்ந்த காற்றில் சிறு தூறலில் கொஞ்சம் ஆசுவாசம்
வேறொன்றும் புதிதாக இல்லை
ஏன் இந்த உலகு
ஏன் இந்த மனிதன்
ஏன் இந்தப் பிறப்பு
கடக்கும் காலத்திற்கு எது பற்றியும் அக்கறை இல்லை
காதலின் பால் எல்லாம் தீர்ந்துவிடும்
என்று நினைப்பது பேதைமை
வேற எதுவும் இல்லாத இந்த வாழ்வில்
இறப்பை மட்டுமே வரவேற்க முடியும்
கல்லறைத் தோட்டத்தில் கனவுகளில்
மரித்த உடல்கள் எதுவும் செய்வதற்கில்லை
இருண்ட உலகில் ஒளிதரும் நம்பிக்கை தவிர இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை ....

Comments
Post a Comment