இரவின் தொடக்கத்தில் முளைவிடும் அந்த நட்சத்திரத்தை இன்று காணவில்லை
அதனுடனான உரையாடல் மிகவும் பிடிக்கும்
சிலவேளைகளில்
சொற்கள் கசப்பை உமிழ்ந்துவிடுகின்றன
யாருடனான பயணத்திலும் ஏதேனும் ஒரு கணத்தில் உணர்ச்சிகள் சீண்டப்பட்டுவிடுகின்றன
இதயங்களுக்கு இடையே கீறல்கள்
வாஞ்சை என்பது போய்
பகை தோன்றி எழுந்து நிற்கிறது
நீளும் இடைவெளியில்
முறியாத காதல் மட்டும் இமை திறந்து
அணைத்து முத்தமிடக் காத்திருக்கிறது
ஒவ்வொரு அந்தியிலும் அந்த விண்மீனின் வருகை எப்போது நிகழும்
என தகித்திருக்கிறது மனம்
திரும்பவும் வரும்வேளை மன்னிப்பைக் கோருவேன்
அப்போதைய ரம்மியமான சிமிட்டல்களில் மீண்டும் மெய்யுருகும் சம்பாஷணையைத் தொடங்கிவிடுவேன்
பின் இரவுகளில் நட்சத்திர நினைவோடு உறங்கிக்கொள்வேன்.
July 19 - 8.02 மாலை

Comments
Post a Comment