நினைவு ஒரு நட்சத்திரம்
இரவு நிசப்தத்தில் வீழ்த்துகிறது உலகை
விரிந்த ஆகாயமும் விரிந்த நிலமும் ஒரு துளி ஓசையின்றி கிடந்தன
திடீரென்று அழும் ஒரு குழந்தையின் அழுகுரல் நிச்சலனத்தைக் கீறியது
சலனமற்ற இருட்டில் அதன் அதிர்வற்ற பொழுதில் அவளின் நினைவு ஒரு நட்சத்திரம் போல உதித்தது
அதன் மினுமினுப்பில் அவளின் வனப்பு
கூடலற்ற பொழுதில் விரியும் கற்பனையில் ஏக்கங்கள் உயிர் பெற்றன
அடர் தனிமை புனைவைக் கைப்பற்றி
கலவிக்கு சென்றது
எங்கும் சென்று விட முடியாத விரக்தியில் களிப்புகள் மடிந்து போயின
காலடியில் சுற்றும் கிருமி உயிரை மோப்பம் பிடித்தது
உயிரே பிரதானமான வேலை வீடுகள் சமாதிகள் ஆகிவிட்டன
நோய்த் தொற்றி விடும் பயத்தில் யாரும் யாரையும் பார்ப்பதில்லை
வாழ்க்கை சவப்பெட்டிக்குள் தள்ளிவிட்டது
இரவைப் போலவே இருண்டுவிட்டது யாவும்.
ஜூன் 16 இரவு 11.23

Comments
Post a Comment