உன்னைப் பார்க்காத விழிகளின் கண்ணீரை போல இங்கு நல்ல மழை
சொட்டுச் சொட்டாய் வடியும் நீர்த்துளிகள் மோதித் தெறிக்கும் இசையில்
உன் பழைய சொற்கள் ஒலிக்கின்றன
எதுவும் செய்ய முடியாமல் என்னை நான் உணராமல் உன் நினைவின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கிறேன்
உன்னிடமிருந்து எந்த சைகையும் இல்லை
மூடிக்கிடக்கும் உன் திசையில் மௌனம் பெரிதாய் பூத்துக் கிடக்கிறது
உரையாடுவதற்கு யாருமில்லாமல்
நிசப்தத்தில் உறைந்திருக்கும் சுவர்களை
வெறித்துப் பார்த்து வெறுமையில் உழல்கிறேன்
குளிரும் அறைக்குள் நடுங்கிய தனிமையில் உன் ஞாபகத்தின் மீது படுத்திருக்கிறேன்
அநாதரவான காலத்தில் ஓர் அநாதையின் மனநிலையில் கைவிட்ட உலகத்தின் முன் நிற்கிறேன்
என் மீதிருந்த இரக்கம் உன்னிடம் இல்லை என்பதை உணர்கிற போது
விரக்தியில் விழுந்து மடிகிறேன்
நீயற்ற இந்தப் பொழுதுகளில்
நான் என்பது இல்லாததாகவே இருக்கிறது
இளகிய இதயத்திலிருந்து எழும் என் குரல் உனக்கு கேட்டிருக்கக்கூடும்
ஆயினும் கேட்காதது போலவே இருக்கிறாய்
இரு
நான் பெரிதாய் விரியும் தனிமையில்
வெடித்துச் சிதறிப் போவேன்.
ஜுலை 20 - 10.39 / இரவு
Comments
Post a Comment