நிதானமாய் யோசித்து மெதுவாய் வா புத்தா நீ எப்போதும் போலவே ஆழ் துயிலில் இரு
உன்னை துன்புறுத்த விரும்பவில்லை
உன் கனவுகளில்
பசியாற நாங்கள் உண்டு களித்து இருப்பதைப் பார்த்து இருப்பாய்
ஆனால் இங்கு நடப்பதெல்லாம் தலைகீழ்
அதை நீ அறிந்திருக்க மாட்டாய்
அமைதியை அனுபவித்து மெதுவாய் வா
மூடை மூடையாக சேர்ந்திருக்கும் துன்பங்கள் உன் பிரசங்கத்திற்காக காத்திருக்கின்றன
வாழ்வில் இருந்த வசந்தம் எல்லாம் போயே விட்டது
இங்கு எல்லா கணங்களிலும் சருகுகளே உதிர்ந்து கொண்டிருக்கின்றன
மரணச் செய்திகளே அதிகம் உலாவரும் காலத்தில் இருக்கிறோம்
சுகங்களைத் துய்த்து நாட்கள் ஆயிற்று
நதியின் வெள்ளப் பெருக்குப் போன்று கண்ணீர்த் துளிகள் எங்கும்
பசித்தவனுக்கு சோறில்லை
உழைப்பவனுக்கு வருவாய் இல்லை
குழந்தைகள் பட்டினியில் கதறுகிறார்கள்
எதற்கும் வழியற்றவன்
தூக்குக்கயிற்றில் தொங்குகிறான்
நீ துன்பத்தை விரட்ட யோசனைகள் சொன்னவன்
மீந்து இருப்பவர்கள் இறப்பதற்குள் வந்துவிடு
இல்லையேல் உன் சிலையை உடைத்து
இறப்பவர்களை எரித்து விடுவோம் புத்தா
துன்பம் சாம்பல் ஆவது ஆகட்டும்.

Comments
Post a Comment