நட்சத்திரங்கள் சிமிட்டாத வானம் இறந்து போய் கிடக்கிறது
அதன் இறுகிய மௌனத்தில் என் தனிமை மறைந்து கொண்டிருந்தது
இறந்து போனவன் இறந்து கொண்டிருப்பவன்
இறக்கப் போகிறவன்
நிலையாமையை உணர்த்துகிறார்கள்
யாருக்காகவும் எப்போதுமிருக்கும் இயற்கை மடிந்து போகவில்லை
எத்தனை காலம் இந்த பூமியில்
நான் விழித்திருப்பேன் என்று சொல்வதற்கில்லை
ஒரு நாள் சூரியோதயம் என்னை விட்டுப் போய்விடும்
யார் யார் எதுவரை இருப்பீர்கள் என்று
சொல்லத் தெரியவில்லை
இருப்பு என்பது துயர் மற்றும் சொல்லவொண்ணா வேதனை
இருக்கும் வரை
ஆகாயம் அழகு
நிலவும் நட்சத்திரங்களும் அழகு
நீயும் அழகு என் அன்பே

Comments
Post a Comment