உச்சி வெயிலின்  தாக்கத்தைப் போல அவள் குரல் கேட்காத திசைகள் வதைக்கின்றன
பறவைகள் எல்லாம் பயந்துபோய் மர நிழல்களில் பதுங்கி இருப்பதைப் போல
அவளின் பழைய உரையாடலில் புதைந்து இருந்தேன்
ஆழ்ந்த மௌனம் சூழ்ந்த சுவர்களுக்குள்
நான் என்பது புத்தகம் போல் மூடிக் கிடந்தது
கசங்கிய மூளையில் நரகத்தின் வாயில் திறந்து கிடந்தது
தூரத்திலிருந்து வந்த அழைப்பு ஒன்றில்
மரணபயம் வந்து போனது
பகலிரவுகளைக் கடந்து கடந்து
வாழ்வின் மீது வெறுப்பை உமிழ்ந்து உமிழ்ந்து
கொண்டாட்டங்களைத் தொலைத்துக் தொலைத்து
ஊரடங்கில் அடங்கி அடங்கி
நோய்த்தொற்றுக்கு நடுங்கி நடுங்கி
தனிமைப்படுத்துதலில் காலம் கடக்கையில் வாஞ்சையோடு பேசும் குரல்களும் மரித்துப் போயின
யாருக்காக இங்கிருக்கிறேன் என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறேன்
இருப்பின் பொருள் புரியாமலும்.

Comments

Popular posts from this blog