போய்விட்ட மழையின் ஈரத்தை படர்ந்த வெளியில் ஒரு பறவை நடுங்கிய குரலில் இசைக்கிறது நீயோ அதைக் கேட்கும் தூரத்தில் இல்லை
நானோ அதன் இசை மொழியை உன் சொற்களாக்கிக்கொள்கிறேன்
குளிர் தென்றல் பரவும் காலையில்
மிகக்குறைந்த சூரிய ஒளியில்
மழைக்காலத்தின் பருவத்தை
நீயாக உணர்கிறேன்
இரவின் பாதாளத்தில் விழுந்திருந்து
நீயற்ற கனவை உதறி ஒளி குன்றிய கணங்களின் மீது உன் நினைவைச் சுமந்து அமர்ந்திருக்கிறேன்
உன் இரவைக் கடந்து விட்ட நீ
திறந்த உன் இமைகளில் என்னை பார்த்திருப்பாய்
உனக்கும் எனக்குமான இடைவெளியில் நம் ஞாபகங்கள் மிதந்தலையக் கூடும்
தனிமையை தந்துவிட்ட காலத்தால் நிகழ்ந்துவிட்ட பிரிவு பெரும் பாறையில் சிக்கிய வலியினை தந்துவிட்டது
கருணையும் காதலும் ததும்பிய
வார்த்தைகளை உன்னருகில் இருந்து கேட்க வேண்டும்
பேரிடர் முடிந்தபின் வந்துவிடும் பனிக்காலத்தில் உன் இதயத்தைத் திறந்து உன்னிடம் வருவேன் என் அன்பே ....
July 10 /2020 மதியம் 12.44

Comments
Post a Comment