துயரநாட்களில் வேதனைமிக்க கதைகள் ஒலித்தவண்ணமிருக்கின்றன
செய்வதறியாது எதையாவது செய்து அமைதியைத் தேடுகிறேன் 
அது தூரத்தில் எங்கோ மறைந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது
சுட்டெரிக்கும் பகல் உடலைத் துளைத்து மனதின் சமனைக் குலைக்கிறது
எந்தப் பிடிமானமும் இல்லாது பறவைகள் பாடுவதை 
வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதை நட்சத்திரங்கள் மினுங்குவதை 
புலனுற்று லயிக்கும் நிலை துறக்கிறேன்
எத்தனை நாட்கள் சுவர்களுக்குள் மறைந்து திரிவேன்
மூளை நரம்புகள் ரத்தத்தில் சூடேறி
தனிமைக்குள் வெடித்துச் சிதறுகின்றன
எப்போதாவது வரும் மழையில் நனையும் இதயத்தில் 

கொஞ்சம் ஆறுதல் மீள்கிறது
ஈரம் காய்ந்து உலர்ந்துபோகையில்
உயர்ந்த வெப்பத்தில் புத்தி பேதலித்து 

பைத்தியத்தின் வாசலைத் திறக்கிறது
எனக்குள் நான் எதை எதையோ பேசி 

அநாதரவான தெருக்களில் திரியும் மனிதன் போலாகிறேன்
இரவு நதிபோல் பொங்கி என் அறையை நிரப்பும்போது 

மூழ்கிப்போகிறேன் ஏதும் புரியாது
இனியும் இவ்வாறுதான் என நினைக்கும்வேளை 

எதுவேண்டுமானாலும் ஆகிப்போகலாம் என்ற சமாதானத்தில் 
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டேன்.

Comments

Popular posts from this blog