பசிக்கு உணவளிப்பதை விட்டுவிட்டு 
கண்ணுக்குத் தெரியாத நோய்த்தொற்றின் 
எண்ணிக்கையைப் பற்றி நாள் தவறாமல் 
அறிவித்துக்கொண்டு அதை விரட்டும் வழிகளை 
ஆராய்ந்துகொண்டிருக்கிறீர்கள்
உழைக்கும் வழியற்று நிர்க்கதியிலிருக்கிறோம்
அடுப்புகள் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றுவிட்டன
நெல்மணிகள் இருந்த பானைகளில் வெற்றிடம் நிரம்பி வழிகிறது
உங்களுக்கென்ன கைநிறைய

 காசும் மூடை மூடையாய் அரிசியையும் 
பதுக்கி வைத்துள்ளீர்கள்
நீங்கள் நடத்தும் நாடகத்தில் 

எங்கள் பாத்திரங்கள் கண்ணீரில் நிரம்பித் ததும்புகின்றன
பரவும் தொற்றில் மடிந்துபோகலாம் கவலையில்லை
பசியில் மடியும் காலத்தைத் தந்த

உங்களைத்தான் மன்னிக்கவே முடியாது
எங்கள் வரிசையில் நாங்கள் நிற்கவில்லை
இந்த தேசத்தின் வறுமை உலகத்தின் முன் 

அவமானமாய் நிற்கிறது வல்லரசே.

Comments

Popular posts from this blog