வானில் உதித்த வெள்ளியில் உன் இமைகள் அசைகின்றன நான் உன்னையே பார்ப்பதான பிரமையில்
இரவும் வானமும்
வந்தவுடன் நீயும்
விண்மீனில் ஒன்றாய் வந்துவிடுகிறாய்
பிறகு நான் இருளின் மீது அமர்ந்திருக்கிறேன்
உன்னிலிருந்து சொல் சொல்லாய் உதிர்கிறது ஒளி
நனைந்து நனைந்து அந்தகாரத்தில்
மிதந்து மிதந்து உன்னை நுகர்கிறேன்
ஒரு பைத்திய நிலையில் காதலின்
பள்ளத்தாக்கில் விழுந்து புரள்கிறேன்
நீ எங்கோ வேறொரு இடத்தில் மறைந்து இருக்கிறாய்
என் திராணியற்ற கண்களால் கண்ணுற முடியவில்லை
இயற்கையின் வெளியில் நிலவாகவோ
விண்மீன் ஆகவோ
அசைந்தாடும் ஒரு நாணல் ஆகவோ
நதி இடையே துள்ளி விழும் ஒரு மீனாகவோ
வெட்டவெளி காற்றாகவோ
ஒரு பறவையின் குரலாகவோ
கடலின் அலையாகவோ
மலையின் அமைதியாகவோ
உன்னைத் தரிசிக்கிறேன்
எங்கும் செல்ல முடியாத நான்
எங்கோ இருக்கும் உன்னை
என் அருகினில் இப்படி
உணர்ந்துகொள்கிறேன்
காலம் மாறுகிற வேளை
உன் நிஜத்தில் நிஜமாகிப் போவேன் .

Comments

Popular posts from this blog