பரந்து விரிந்த ஆகாயத்தின் கீழ் ஒரு சிறு துண்டு மேகம்போல் அலைகிறேன் காற்றின் மென்மையில் நிலைத்திருக்கிறேன்
ஒரு பறவையைப் போல அந்தரத்தில் மிதக்க ஆசை
மிதத்தல் அசாத்தியமானது
ஆனாலும் மிதக்கிறேன்
அதை உங்களுக்கு புரிய வைக்க முடியாது
அற்ப பிறவிகள் வாழும் உலகில்
அசாத்தியமானவன் கவிஞன்
எந்த நோய் தொற்றும்
என்னை எதுவும் செய்வதற்கில்லை
என் நம்பிக்கை
நீந்தும் மீன்களின் செதில்களில்
கடல் என்னுடையது
உங்கள் வலைகளை பிய்த்து எறிந்து விடுவேன்
நான் ஒரு அபூர்வம்
கவிதை ஒரு வினோதம்
எனக்கு நீங்கள் எதுவும் தரத் தேவையில்லை
எல்லாம் என்னிடம் வரும்
நான் ஒரு கவிஞன்
என் காதலில் அவள் இருக்கிறாள்
அது போதும்
இந்த வாழ்வு தரும் இடர்களைக் கடந்து விடுவேன்
என் மரணம் உங்களுக்கு ஒரு செய்தியாக இருக்கலாம்
ஆனால் என் கல்லறை நிலையானது
அவளின் நினைவோடு உறங்கிக் கொள்வேன்
நான் சிறுதுண்டு ஆகாயம் எனில்
உங்களில் மழையாய்ப் பொழிந்து மறைந்து போவேன்.

Comments
Post a Comment