1.
அந்த இரவு நேரத்தில் சுற்றிச் சுற்றி அச்சிறு வண்ணத்துப்பூச்சி என் மீது அமர்ந்தது
ஒரு மலராக தெரிந்து இருப்பேனோ என்று தெரியவில்லை
வட்டமடித்த அந்தப் பொழுதுகளில் தனிமை துயர்கள் பறந்து போயிருந்தன
என்னை அதுவும் அதை நானும்
இதற்கு முன் பார்த்ததே இல்லை
அது ஏன் என்னிடம் வந்தது என்றும்
அதன் பறத்தலில் என்னை ஏன் மெய் மறந்தேன் என்றும் தெரியவில்லை
பிறகு நான் நித்திரைக்குள் அமிழ்ந்துபோனேன்
என்னை மலர் என்று நினைத்த அது
என்னைப் போன்ற ஒரு மலராகிய கவிஞனின் மடியில் அமர்ந்திருக்கக் கூடும்.
2.
நீலக் குழல் விளக்கின் வெள்ளை ஒளி
அறை எங்கும் வியாபித்த பொழுதுகளில்
ஒரு பூந்தோட்டம் தோன்றிய மாயையில்
சிக்கிய அச்சிறு வண்ணத்துப்பூச்சி
பூக்களின் மீது அமர்ந்து அமர்ந்து பார்த்தது
விசித்திரமான இக்காட்சியில்
அச்சிறு பூச்சியின் மூளையில்
குழல் விளக்கின் சுடர்
வெள்ளை மலர்களாக தோன்றியிருந்தால்
அதன் கற்பனை அது சரிதான்.
3.
இருளை நீக்கிய ஒளியின் இடையே அச்சிறு வண்ணத்துப்பூச்சி
ஏன் நுழைந்து பறக்கிறது என்று அறிவதற்கு இல்லை
எதுவுமில்லாத வெறுமையில்
எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல்
எதையோ தேடித் தேடிக் கொண்டிருக்கிறது
தேடலின் முடிவில் விளக்கு அணைய
எதுவும் கிடைக்காத விரக்தியில்
எதிர்பாரா இருட்டில் துடிதுடித்து
வெளிச்சம் இருக்கும் திசைநோக்கி
பறந்து போனது.
4.
இந்த நேரத்தில் இது ஏன் இங்கு வந்தது
என்னைத் தவிரவும் விளக்கின் ஒளி தவிரவும் வேறொன்றுமில்லை
நிச்சயம் ஒரு மனிதனை நோக்கி
வந்திருக்கப் போவதில்லை
மனிதன் பூக்கும் தன்மை இல்லாதவன்
என்று அதற்கு தெரிந்திருக்கக் கூடும்
அறை நிரம்பிய ஒளி
பெரிய மலராக தெரிந்திருக்கக் கூடும்
வெளிச்சத்தின் மீது அமர்ந்து அமர்ந்து
பூக்களைச் சோதித்த அது
குழம்பிப் போயிருக்கும்
ஆனாலும் அது நம்பிக்கையைக் கைவிடவில்லை
இன்னும் வெளிச்சத்தை மலர்கள் என்று நம்பியே அறையை வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment