என் மொட்டை மாடிக்கு புத்தன் வந்துவிட்டான் 
அவனுக்கு இங்கு நடப்பது எதுவும் புரியவில்லை 
இங்கே ஏன் திடீரென்று இவ்வளவு மரணம் என்று கேட்கிறான்
இழப்பை புதிராக பார்த்தவனுக்கு இவ்வளவு மரணங்கள் மிகப் பெரும் அதிர்ச்சியாய்  இருக்கக் கூடும் 
இங்கு ஒரு நோய்க்கிருமி எங்களை துரத்துவதாக சொன்னேன்
அதைப்பற்றி கவலை கொள்ளாதே என்றான்
சாவு அவ்வளவு எளிதா என்றேன்
எளிதுதான் என்றான்
ஆனால் இப்படி சாகக்கூடாது என்றான்
நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த நான் நிலவு ஏன் சாகவில்லை என்றேன்
நிலவைப்போல் நீ இல்லை என்றான்
நான் யார் என்றேன்
நீ சாகப் பிறந்தவன் என்றான்
அதற்காக இப்படித்தான் சாக வேண்டுமா
எப்படியும் சாகத்தான் வேண்டும் நீ என்றான்
நான் சாவதற்கு தயாரானேன்
புத்தன் மாடிப்படி இறங்கி போய்விட்டான்
நான் நிலவில் கலந்துவிட்டேன்.

Comments

Popular posts from this blog