மழையிரவினுள் தலைக்குள் ஆந்தைகள் அலறுகின்றன 
விபரீத காட்சிகள் தோன்றும்விதமாக
இருட்டின் மீது அமைதியைப் போல் படுத்திருந்தேன் 
யாரும் அருகில் இல்லாதது போல
வானம் திறந்த நீர்த்துளைகள் மூடாதிருந்தது 
எதற்கென்று தெரியாமல்
நிசியில் வீடுகள் பேய் ஒளிந்திருப்பதான பாவனையில் 
பயமுறுத்திக்கொண்டிருந்தன
நிகழ்காலம் சாவின் விளிம்பில் தொக்கி 
உலகை அச்சத்தில் சாய்த்திருந்தன
வெயில் பகலை எரித்து போது சதைகள் 
வெந்த ஊரின் முனகலைக் கேட்டிருந்தேன்
இரவை மழை ஈரத்தில் வீழ்த்தி 
கடுமையாய்ப் புணர்ந்துகொண்டிருந்தது
நானோ நித்திரை வராது எதிர்காலம் தொலைந்த நினைவில் 
நரகம் பீடித்த நகரில் விரிந்த தனிமையில் வீழ்ந்துகிடந்தேன் 
இருப்பை உணராமல்
சூரியன் உதிக்கும் பொழுது நான் நேற்றிலிருந்து 
புதிய நாளைக்குத் திரும்பியிருப்பேன் 
புதிய பயங்களுடன்.

Comments

Popular posts from this blog