உன்னைக் கவிதையில் எழுதுதல்
ஜன்னல் வழியே இளம் வெயிலாய் வந்துவிழுகிறாய்
பறவைகளிடமிருந்து உன் இசைக்குரல் கேட்கிறது
மரங்களின் நடனங்களில் இருந்து எழும் ஓசைகளில் காற்றாய் வந்து தீண்டு கிறாய்
காணும் இளம் பெண்களின் முகங்களில் உன் முகம் தெரிகிறது
பூத்துக் கிடக்கும் மலர்களில் உன் நறுமணத்தை நுகர முடிகிறது
முகம் உரசி செல்லும் வண்ணத்துப் பூச்சிகளில் உன் முத்தங்கள்
கிளர்ச்சியூட்டுகிறது
வெறுமை கூடிய தனிமையில் உன் புகைப்படங்கள் ஆறுதல் அளிக்கின்றன
பயமுறுத்தும் இரவுகளில்
உன்னை இறுக அணைத்துக் கொண்ட ஞாபகங்கள் மேல் எழுகின்றன
விரக்தியில் நகரும் நாட்களில்
உன் நினைவுகள் ஒத்தடங்கள் போல் இருக்கின்றன
நதியோர நாணல்களில்
உன் இளம் உடல் அசைந்து ஆடுகிறது
புல்லின் மீதான பனித்துளிகளில்
உன் விழிகள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள் காட்சியளிக்கிறது
பயணத்தை அனுமதிக்காத பாதைகளிலிருந்து உன்னை கவிதைகளில் எழுதி காண்பதைத் தவிர
எந்த மார்க்கமும் இல்லை அன்பே ....
ஜூன் 19 காலை 10.13

Comments
Post a Comment