நரகத்தின் வாசல்
எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்துக்கொண்டார்கள்
இப்போதுதான் நரகத்தின் வாசல்
திறந்துகொண்டிருக்கிறது
உயிர்த்திருக்கும் யாவிலும் இறப்பின் நிழல் படர்கிறது
ஒவ்வொரு மலராய் காற்று வீழ்த்தும்
பொழுதுகள் தொடங்கிவிட்டன
இனி மிஞ்சப்போவது நீயோ நானோ அல்ல
ஆதியிலிருந்த நிலம் மீளும்
கடலும் ஆகாயமும் அப்படியே இருக்கும்
காற்றின் பாடலில் உயிரினங்கள் மகிழ்ந்திருக்கும்
தீ தானகவே எரிந்து எரிந்து அணையும்
கறைபடாத பூமியில் மனிதன் இருந்த சுவடுகள்
முற்றிலும் மறைந்துவிடும்
இரவு பகலின் அமைதியில் விழித்திருக்கும்
உலகின் அழகு ஒளிரும் காலம் .

Comments
Post a Comment