என்னை அர்ப்பணித்துவிட்டேன்

நீங்களெல்லாம் நிம்மதியில் இருக்கின்றீர்கள்
நான் என் குழந்தையிடம் செல்ல முடிவதில்லை
அவளுக்கான முத்தத்தையும் அணைப்பையும் 
தவறவிட்டுக்கொண்டிருக்கிறேன
என் கணவன் என் காதலின்றி முடங்கிக்கிடக்கிறான்
நான் என்னை நம்பி வரும் உயிர்களைக் 
காக்கப் போராடிக்கொண்டிருக்கிறேன்
உயிர் போகும் பயத்திலிருப்பவர்களிடம்
நம்பிக்கையைத் தூண்டுகிறேன்
அவர்கள் நிலைகண்டுத் துடிக்கிறேன்
அஞ்சுகிறேன்
என்னுடல் வருத்தி மாய்ந்துபோகிறேன்
என் தூக்கம் உங்கள் அக்கறையின்பால் மடிந்துவிட்டது
என் விழிப்பில் உங்கள் மரணத்தை 

வென்றுவிடப் பார்க்கிறேன்
நீங்கள் உயிர்போய்விடும் 

என துக்கத்தில் மூழ்கிவிடாதீர்கள்
நான் உங்களை என் உயிர் மடியாதிருக்கும்வரை 

உயிர்த்திருக்கச் செய்வேன்
அதோ என்னைப் பார்க்கத் துடிக்கும் 

என் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது
என்னை அரவணைக்கத் தவிக்கும் 

அவனின் கைகள் எனை நோக்கி நீள்வதை உணர்கிறேன்
அவர்களுக்காய் என்னால் எதையும் தரவியலாத 

இயலாமையில் வேதனையின் ஆழத்தில் 
மரித்துப்போகிறேன்
ஆயினும் என்ன என் முன் கதறும் 

எண்ணற்ற உயிர்களுக்காய் 
என்னை அர்ப்பணித்துவிட்டேன்
கலங்கிச் சொட்டும் என் கண்ணீர்த்துளிகளில் 
என் துன்பங்கள் யாவும் ரகசியமாய் 
வெளியேறிக்கொண்டிருக்கின்றன.



Comments

Popular posts from this blog