ஒரு விண்மீனாய்ப் பாவித்துக்கொள்

இப்பொழுதுகளிலெல்லாம் 
உன்னைக் காண்பது முடியாதாகிவிட்டது
வீட்டிற்குள் என்னோடு உன்னையும் 
பூட்டிக்கொண்டு தவிக்கிறேன் 
முட்டைக்குள்ளிருக்கும் உயிரைப்போல
இருளிலிலும் ஒளியிலும் 
உன் ஞாபகம் மட்டுமே உயிர்த்துக்கிடக்கிறது
யாரோ கட்டளையிடுகிறார்கள்
என்னையும் உன்னையும் 
தனிமைப்படுத்திக் கொள்ளுங்களென்று
என்னாலும் உன்னாலும் முடியாதென்று 
அவர்களுக்குத் தெரிவதில்லை
அவர்களுக்கு நாம் வேண்டுமென்பது நிஜமல்ல
அவர்களை நிரூபித்துக்கொள்ளும் 
சந்தர்ப்பத்திற்காய் நம்மை இறைஞ்சுகிறார்கள்
நாம் முக்கியமென்று பொய் உரைக்கிறார்கள்
உயிர் பறிக்கும் கொடிய நோய்க்காலம் 
நம்மை நம் காதலை பயத்தில் சாய்த்துவிட்டது
வெளியே போகாதே வீட்டினுள் இரு 
என்ற அறைகூவல் எல்லாத் திசைகளிலிருந்தும் 
தொடர்ந்து ஒலிக்கிறது
நான் ஒரு தொலைவிலும் 
நீ ஒரு தொலைவிலுமிருக்கிறோம்
இங்கோ ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள்
நானோ உன்னை ஆகாசத்தில் 
ஒளிரும் விண்மீனில் ஒன்றாய்க் காணத் தொடங்கிவிட்டேன்
நீயும் என்னை ஒரு விண்மீனாய்ப் பாவித்துக்கொள்
காதல் மலர்ந்துகொள்ளும் அன்பே.

Comments

Popular posts from this blog