தூய்மைக்குத் திரும்பும் நிலம்
மனிதர்களில்லாத பூமியின் மெளனம்
எத்தனை அழகானது
அங்கு ஒலி மரித்துக்கிடக்கிறது
நகரம் பூமிக்கடியில் புதையுண்ட சவப்பெட்டிபோல
நிச்சலனத்தில் உறைந்துவிட்டது
நான் என்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்னுள் எத்தணை நான் என வியப்பில் வீழ்கிறேன்
மனிதன் தோன்றுவதற்கு முன் இருந்த பூகோளத்தில்
இருப்பதான வெளியில் சஞ்சரித்திருக்கிறேன்
இறந்த உயிரினங்கள் உயிர்த்துவிட்டன போலும்
புத்தம் புது புள்ளினங்கள் இசைக்கின்றன
நட்சத்திரங்களின் புதிய ஒளியில்
விழிகள் ஒளிர்கின்றன
நிலவின் பிரகாசம் எப்போதையும் விட
வெண்மையில் பூத்திருக்கிறது
பரிதி பகலை வெளிச்சத்தில் மிளிரச் செய்கிறது
யாருமற்ற கடல் மீன்களின் துள்ளல்களில்
ஆழ்ந்த களிப்பில் அலைகளோடு பேசுகிறது
தூய்மைக்குத் திரும்பும் நிலத்தில்
மறுபடி மனிதன் வந்துவிடப் போகிறான்
நடுங்கும் இதயத்தில் பயந்த உலகில்
தனித்திருக்கும் நான் புத்துயிர்க்கும் இயற்கையில்
யாரும் என் பூட்டிய கதவைத் தட்ட வேண்டாம்.

Very nice
ReplyDelete♥️♥️♥️
ReplyDelete