காதலை என்னெவென்று சொல்வேன்

நீயோ நானோ பார்த்துப் பேச முடியாத 
இந்தப் பொழுதுகளில் 
ஆகாயத்தில் ஒளிரும் நட்சத்திரங்களோடு 
பேசத் தொடங்கினேன்
யாவும் உன்னைப் பற்றியதாக இருந்தது
அதில் உனக்கு கொடுக்கும் முத்தங்கள்
எண்ணவே முடியாத நட்சத்திரங்கள் போல 
இருந்ததாகச் சொன்னேன்
இந்தக் கணமோ நீ அருகில் இல்லை
எப்போது அருகே வருவாய் எனவும் சொல்வதற்கில்லை
சேகரமாகும் உன் முத்தங்கள் வேதனையில் உழல்கின்றன
பூட்டிய வீட்டைத் திறக்க முடியாமல் 

மேலும் நாட்கள் நீட்டிப்பது யாரிட்ட சாபமோ
உலகத்தின் ஒரு மூலையில் உயிர்கள் மடிந்துவரும்வேளை 

உனக்கான முத்தங்களுடன் தவிக்கும் 
என் காதலை என்னெவென்று சொல்வேன்
கண்ணுக்குத் தெரியா நோய்மையும் 

கண்ணுக்குத் தெரியா மனிதரும்
நம் வாழ்வைச் சூறையாடுகிறார்கள்
நம் பூட்டின் சாவிகள் நம்மிடமிருந்தும் 

திறக்கும் வலிமையின்றிக் கிடக்கிறோம்
வந்துபோகும் சூரியனைப்போல நாம் இருக்கப்போவதில்லை
ஆயினும் வலுவிழந்து வரும் 

உனக்கான முத்தங்களுடன் காத்திருப்பேன் அன்பே.



Comments

Popular posts from this blog