ஒவ்வொரு சூரியோதயமும் அச்சத்தை உடன் அழைத்து வருகிறது
பேரிடர் காலம் முடியும் வரை மரணம் தன் எண்ணிக்கையை உயர்த்துவதை நிறுத்தப் போவதில்லை
திறந்தே கிடக்கும் மயானத்தில்
எத்தனையோ நம்பிக்கைகளும் கனவுகளும் நெருப்பில் சாம்பலாகி உதிர்கின்றன
பயம் ஒவ்வொருவரின் கழுத்தையும்
கவ்வி பிடித்திருக்கிறது
தெரிந்தவன் தெரியாதவன் அந்நியமாகி போனார்கள்
அகன்று பெருத்து விட்ட இடைவெளியால்
கைகொடுத்து கட்டித்தழுவி முத்தமிட்டதெல்லாம் நெடிய கனவாகிவிட்டது
நான் உன்னையும் நீ என்னையும்
நெருங்காதவாறு செய்துவிட்ட
இந்த நோய்த்தொற்று
நமக்கும் இவ்வுலகிற்கும் பெரும் சவாலாகிவிட்டது
புலப்படா எதிரியைக் கொல்லும் காலம்
நிகழ்கின்ற வேளைதான்
உலகின் இரவுகள் ஆழ்ந்த நித்திரையில்
அமைதிக்குத் திரும்பும்
அப்போது நம் இரவுகளும் விடியாது இருக்கட்டும் அன்பே...

Comments
Post a Comment