பொட்டுப் பொட்டாய்த் தூறும் மழையில்
நனையும் உடலில் நடுங்கும் நினைவில்
நீயிருக்கிறாய்
மழைக்கு முன்பான பொழுதில்
பற்றிக்கொண்ட உரையாடலில்
சொற்கள் சாம்பலாகிவிட்டன
இடைவெளி கூடிய இக்காலத்தில்
கனக்கும் தனிமையில்
இதயத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன
ஏதோ ஒரு கணத்தில் கைகூடும்
கொண்டாட்டம் நீளும் கணங்களில்
மடிந்துபோகிறது
தானாகவே நிகழும் நிகழ்வுகள்
விபரீதத்தை உண்டு பண்ணும்
என்பதை முன்கூட்டியே
அறிய முடியாமல் போகிறது
எதிரிலிருந்து சந்தேகிப்பவர்கள்
உண்மையைப் புனைவெனக் கொள்கிறார்கள்
கருணையில் மிதக்கும் மென்மை நிரம்பிய
மனம் சிராய்ப்புகளில் இரத்தம் சிந்துகிறது
எதையும் சரி செய்துகொள்ள முடியாத போது
பொட்டு பொட்டாய்த் தூறும் மழை
சுயத்தை இழக்கச் செய்வது பெரும்
ஆறுதலாய் இருக்கிறது அன்பே..

Comments

Popular posts from this blog