மேகங்கள் உராய்ந்து கொள்வதுபோல
சொற்கள் மாறுகிறவேளை
விழிகளில் மறைந்த நதி பிளந்து
நீர்த்துளிகள் கொடிக்கம்பிகளில்
கண்ணீராய் உருண்டு திரள்கிறது
புரிந்தும் புரியாமலும்
நீளும் பேச்சில் அசம்பாவிதங்கள்
தொடர் மழையினைப் போன்ற
நடுக்கங்களைத் தருவிக்கின்றன
தப்புத்தப்பான வாக்கியங்கள்
தற்கொலையின் கதவுகளை
திறப்பதற்கான சாவிகளை
கைகளில் ஏந்தி நிற்கின்றன
ஒரு நாளின் மழை நிதானமாகவும்
மற்றொரு நாள் ஊரையே விழுங்கும்
நிதானமற்றும் இருப்பதைப் போலவே
இயக்கங்கள் புதிராகவே
யாரும் யாருடனும் நெருங்கியிருப்பது
தற்காலிகமானது
எப்போதுமே பெய்யாத மழைபோலவே
யாவும் அநித்யமானது
அபூர்வமானது.

Comments
Post a Comment