அதோ நம் இரவு பூப்பெய்திய பருவப் பெண்ணின் நாணத்துடன் வருகிறது அந்தியோ கண் மயக்கும் வண்ணங்களால் வரவேற்கப் போகிறது
நீயும் நானும் பிறக்கப் போகும்
ஆழ்ந்த அமைதியில்
குளிர்விக்கும் நட்சத்திரங்களின் கீழ்
காதலை கண்கள் கொண்டு தீட்டப் போகிறோம்
உன் சினத்தால் உடைந்து போயிருந்த உரையாடலை கனிந்த பார்வைகளில்
சீர் செய்து தொடங்குவோம்
உன்னுடனான ஊடல் பல பொழுதுகள் நீடித்தாலும் உன் சொல் கேளா மனம்
கூடலுக்கு ஏங்கித் ததும்பிவிடும்
என் மீதான உன் புகார்கள் இருப்பினும்
உன் இதயத்தினுள் அவற்றை எரித்துவிடுவதே நம் அன்பில் மழை பெய்வது சாத்தியமாகிறது
சூரியன் மறைந்து துளிர்க்கும் இரவுகளில் நீயும் நானும் விரல் கோத்து
நிலவினூடே நம்மிடையேயான முரண்கள் களைந்து தோள் சாய்ந்து
இதழ்களில் கவிதைகள் புனைகிறோம்
நகர்ந்து விரையும் காலத்தில்
காயங்களையும் அதற்கான தைலத்தையும்
வழங்கிக்கொண்டிருக்கும் உன்னிடம் நான் இது போன்ற இரவுகளை அள்ளி அள்ளி தந்துகொண்டிருப்பேன் அன்பே...

Comments
Post a Comment