நீள் துயிலில் என் நிழற்படக்கருவி
பசித்தபொழுதுகளில் விழித்துக்கொண்டு பசியாற்றும்
முற்றிலுமாக அதைச் சிதைத்து அடக்கம் செய்ததுபோல்
ஆக்கிவிட்டது இந்தக் காலம்
எத்தனையோ மலர்களையும் வண்ணத்துப்பூச்சிகளையும்
பறவைகளையும் கடற்புறங்களையும்
ஆகாயத்தையும் உணர்வு கொப்பளிக்கும்
மனித முகங்களையும்
நான் நினைத்ததுபோல் தந்து
என் உயிருக்கு நீருற்றியது
உயிரைக் கொல்லும் நோய்த்தொற்றில் தத்தளிக்கும் பொழுதுகளில்
யாவும் சமாதிக்குள் போன உடல்கள் போல மட்கிவிட்டன
எங்கும் செல்ல முடியாத் தனிமையில்
பிம்பங்கள் பதிவு செய்ய இயலாத போழ்தில்
பூட்டிய இருளில் என்னைப் போலவே
செய்வறியாது செத்துக் கிடக்கிறது அது
அதன் ஒவ்வொரு துடிப்பின் பிரதிகள்
வெற்றுக்கனவுகளாய் போனதில்
பிழைப்பின் வண்ணம் கரைந்து போனது
வாய் திறந்து வலியைப் பேசவியலா உயிராய்
என்னைப் பார்ப்பது போலிருப்பதை தாங்க முடியவில்லை
என்னைப்போலவே அதையும் பூட்டி வைத்தேன்
இப்போது எங்கும் எந்தச் சத்தமும் இல்லை
தனித்திரு செத்துபோய்விடு என்ற குரல் மட்டும்
எங்கிருந்தோ கேட்கிறது.

Comments
Post a Comment